netherlands vs pakistan
netherlands vs pakistan

நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவக்கியது பாகிஸ்தான்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிக் கணக்கை துவக்கியது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் வெற்றிபெற்றது இதுவே முதல் முறையாகும்.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி விளையாட்டரங்கில் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி, 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து பாகிஸ்தான் முதலில் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபக்கர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்சில் ரன் எடுக்க திணறினர். முதல் பத்து ஓவர்களிலேயே நெதர்லாந்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தது. ஜமான் 12 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 15 ரன்களிலும், கேப்டன் பாபர் ஆஸம் 5 ரன்களிலும் அவுட்டாயினர்.

அடுத்து களத்தில் இறங்கிய ஷக்கீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து ஆடி அணியின் ஸ்கோரை 158 ஆக உயர்த்தினர். ஷக்கீல் 52 ரன்களும் ரிஸ்வான் 68 ரன்களும்  எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்கள். ஷக்கீல் எடுத்த 52 ரன்களில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். பாகிஸ்தான் அப்போது 188 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதைத் தொடர்ந்து பந்துவீச்சாளர்களான ஷாதாப்கான் மற்றும் முகமது நவாஸ் இருவரும் சேர்ந்து 64 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் பந்துவீச்சாளர் டீ லீ, ஷாதாப், ஹஸ்ஸன் அலி ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஹாரிஸ் ரவூப் 16 ரன்களில் அவுட்டானார். இறுதியில் பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து நெதர்லாந்து அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்கார்களான மேக்ஸ ஓ 5 ரன்களிலும், ஆக்கர்மென் 17 ரன்களிலும் வீழ்ந்தனர்.

அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் மற்றும் பாஸ் டீ லீடு இருவரும் நின்று ஆட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இருவரும் கூட்டாக 70 ரன்கள் எடுத்தனர். விக்ரம்ஜித் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாதாப் பந்தை அடித்து ஆட முற்பட்டு ஃபக்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தேஜா நிஜம்மனூரு 5 ரன்களில் வீழ்ந்தார். அதே ஓவரில் எட்வர்டஸும் அவுட்டானார். இந்த நிலையில் நெதர்லாந்து 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஜுல்பிகர் 10 ரன்னில் அவுட்டானார். டீ லீடு மட்டும் 67 ரன்கள் எடுத்த நிலையில் நவாஸ் பந்தில் அவுட்டானார்.

இந்த நிலையில் நெதர்லாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் போட்டியில் நெதர்லாந்தை வென்ற பாகிஸ்தான் அடுத்து வருகிற 10 ஆம் தேதி இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. முன்னதாக 9 ஆம் தேதி நெதர்லாந்து அணி, நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com