வார்னர், மார்ஷ் மின்னல் வேக சதம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

வார்னர், மார்ஷ் மின்னல் வேக சதம்: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!
Published on

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் அடித்த மின்னல்வேக சதம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவியது.

கடந்த வாரம் ஆமதாபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், இப்போது ஆஸ்திரேலியாவிடமும் தோல்விகண்டது.

இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, மீண்டு எழுந்து முதலில் இலங்கையை வென்றது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி, 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்கமே உற்சாகமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து விளையாடினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்து உலக கோப்பை ஒருநாள் போட்டியில் சாதனை படைத்தனர். அதிரடியாக ஆடி சதம் எடுத்த மிட்செல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்திருந்தபோது 34 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடி பந்து வீச்சில் உஸாமாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த 121 ரன்களில் 10 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்து ஆடவந்த கிளென் மாக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலே அஃபிரிடி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித்தும் சோபிக்கவில்லை. 7 ரன்களில் வெளியேறினார்.

இந்த நிலையில் மின்னல் வேகத்தில் சதம் எடுத்த டேவிட் வார்னர் 163 ரன்கள் எடுத்திருந்தபோது ரவூப் பந்து வீச்சில் ஷாதாப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். உலக கோப்பை ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின்  மூன்றாவது ஆட்டக்காரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார். அவர் அடித்த 163 ரன்களில் 14 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடங்கும்.

எனினும் இதர ஆட்டக்காரர்கள் அப்படியொன்றும் சிறப்பாக ஆடவில்லை. ஒரு கட்டத்தில், அதாவது 43 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 42 ரன்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் எடுத்திருந்தது.

அஃபிரிடி 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவூப் 3 விக்கெட்டுகளையும் உஸாமா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அடுத்து பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா ஷபீர் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ஆடினர். இருவரும் சேர்ந்து 134 ரன்கள் சேர்த்தனர்.

அப்துல்லா ஷபீக் 64 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டோனிஸ் வீசிய பந்தை அடிக்க முற்பட்டு மாக்ஸ்வெல்லிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். அவரது 64 ரன்களில் 7 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இமாம் உல் ஹக், ஸ்டோனிஸ் வீசிய பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்களும் 50க்கும் அதிகமான ரன்களை எடுத்தது இதுவே முதன்முறையாகும்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. பேட்டிங்கில் அவர் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பிறகு சவூத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நின்று ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். எனினும் ஷக்கீல் திறமையை நன்கு வெளிப்படுத்த தவறிவிட்டார். 30 ரன்களில் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஸ்டோனிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இப்திகார் அகமது தொடக்கத்திலேயே சிக்ஸர்களை அடித்து பந்துவீச்சாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தினார். ஆனால், 26 ரன்களிலேயே ஜம்பா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூவாகி அவுட்டானார். ஓரளவு நின்று ஆடிய ரிஸ்வானும் 41 ரன்களில் ஜம்பா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூவாகி வெளியேறினார்.

இதையடுத்து பாகிஸ்தான் 45.3 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. அணியின் ஜம்பா 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

இனி ஆஸ்திரேலியா அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் வருகிற 23ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com