இந்தியா பாகிஸ்தான் இடையே சுமூகமான உறவு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்தவகையில், பாகிஸ்தானின் இன்றைய சூப்பர் லீக் போட்டி ரத்தானது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் எதிர்வினை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. நேற்று முன் தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நடத்திய துல்லியத் தாக்குதல்களின் எதிரொலியாக, ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த இரண்டு முக்கியமான PSL போட்டிகள் இரத்தாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி திடீரென நிறுத்தப்பட்டது. இன்று நடைபெறவிருந்த லாகூர் குவாலாண்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டியும் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே டிரோன் ஒன்று பறந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த திடீர் ரத்து காரணமாக, PSL தொடரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளை கராச்சிக்கு மாற்றலாமா என்ற ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள், நாடு திரும்புவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இந்த மோதல் விளையாட்டு மைதானத்தையும் தாக்கியிருப்பது வருத்தமளிக்கிறது. சர்வதேச ரீதியிலான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் என்பது நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டு. ஆனால், தற்போது நிலவும் சூழல் அந்த ஒற்றுமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவுகிறது. அமைதியான சூழ்நிலை திரும்பினால் மட்டுமே PSL போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்புள்ளது.