ரிஸ்வான் சதம் வீண்: பாகிஸ்தானை வென்றது நியூஸிலாந்து!

Pakistan vs New Zealand
Pakistan vs New Zealand

உலகக் கோப்பைக்கான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணியிடம் வீழ்ந்தது. பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் சதம் எடுத்தும் பலன் இல்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10-க்கும் மேலான அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதத்தில் ஒவ்வொரு அணியும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன.

ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி, 43.4 ஓவர்களிலேயே 346 ரன்கள் குவித்து வெற்றியை கைப்பற்றியது.

நியூஸிலாந்து அணியின் ராச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 72 பந்துகளில் 97 ரன்களை குவித்தார். கானே வில்லியம்ஸன் 54, டாரில் மிட்சல் 59, மற்றும் மார்க் சாப்மன் 65 ரன்கள் குவித்தனர். ஜேம்ஸ் நீஷம் 21 பந்துகளை சந்தித்து 33 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் நியூஸிலாந்து அணியினர் பாகிஸ்தான் பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இறுதியில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 346 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் ஷா அப்ரிடி விளையாடவில்லை. காயமடைந்த நஸீம் ஷாவுக்கு பதிலாக கடைசி நிமிடத்தில் ஹஸன் அலி அணியில் இடம்பெற்றார். லெக் ஸ்பின்னர் உஸாமா மிர் 10 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணி சார்பில் களம் இறங்கிய அப்துல்லா ஷபீக் (14), இமாம் உல் ஹக் (1) எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. அடுத்துவந்த கேப்டன் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இருவரும் நின்று ஆடி அணியில் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சேர்ந்து கூட்டாக 114 ரன்கள் சேர்த்தனர்.

பாபர் ஆஸம் 80 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். முகமது ரிஸ்வான் 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிடயர்டு ஹர்ட் ஆனார். ஷகீல் அதிரடியாக ஆடி 75 ரன்கள் எடுத்தார். அகா சல்மான் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது.

அஸ்ஸாம் மாநிலம் கெளஹாத்தியில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின.

இதில் இலங்கை அணியை வங்கதேசம் வென்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் நிசங்கா 68 ரன்களும், தனஞ்சயா 55 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 264 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. வங்கதேச அணியில் தாஸ் 61 ரன்களும், ஹஸன் 84 ரன்களும், மிராஸ் 67 ரன்களும் எடுத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com