வில் வித்தையில் சாதிக்கும் கால்கள்.. இது சாதனை வீராங்கனை சீத்தல் தேவியின் கதை!

Sheetal Devi
Sheetal Devithebridge.in

ரு சாதனையைப் படைக்க எது முக்கியமோ அதுவே இல்லாமல் சாதனைப் படைப்பவர்கள் சாதனைக்கே சவால் கொடுப்பவர்கள். ஆம்! அந்தவகையில் பாரா விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் சாதனைகளைப் படைத்து வரும் சீத்தல் தேவியின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி பார்ப்போம்.

சீத்தல் தேவி ஜனவரி 10ம் தேதி 2007ம் ஆண்டு ஜம்மு காஷ்மிரில் பிறந்தவர். சீத்தல் தேவி பிறப்பிலேயே போக்கோமிலியாவால் (Phocomelia) பாதிக்கப்பட்டவர். அதாவது இரு கைகள் அல்லது இரு கால்களும் வளர்ச்சியடையாமல் நின்றுவிடும். அந்த வகையில் சீத்தலுக்கு இரு கைகளும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை.

உடல் வளர்ச்சி குறையுடன் பிறந்தாலும் சீத்தலின் பெற்றோர்கள் அவரை நம்பிக்கை உள்ள பெண்ணாக வளர்த்தார்கள். அதுவே அவரின் இந்த சாதனைகளுக்கெல்லாம் அடிக்கோடிட்டது. சீத்தல் முதலில் வில்வித்தையில் சாதிக்கவேண்டும் என்று நினைக்கும்போது அவரால் வில்லைத் தூக்க கூட முடியவில்லை.

முதலில் அவர் வில்வித்தையில் பங்குப்பெற தகுதியானவரா என்று பரிசோதனை செய்து பார்த்தார்கள். சீத்தலின் உடல்நிலையை பரிசோதனை செய்து பார்த்ததில் வில்வித்தை மற்றும் நீச்சலில் விளையாடுவதற்கு அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார் என ரிப்போர்ட் வந்தது. இதன்பின்னர், சீத்தல் தேவி பயிற்சியில் சேர்ந்து தனது வில்வித்தைப் பயணத்தை தொடங்கினார்.

அவரின் பயிற்சியாளர்களான அபிலாஷா சௌதிரி மற்றும் குல்தீப் வேத்வா சீத்தலுக்கு எந்த வேறுபாடும் பார்க்காமல் பயிற்சி கொடுத்தார்கள். முதலில் சீத்தலுக்கு பயிற்சி அளிக்க முடியுமா என கவலைக்கொண்ட பயிற்சியாளர்கள் இதனைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை செய்தனர்.

அந்த ஆராய்ச்சியில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரரான மாட் ஸ்டுட்ஸ்மேன் (matt stutzman) என்பவர் தனது கால்களைப் பயன்படுத்தி வில்வித்தையில் சாதனைப்படைத்துள்ளார் என தெரிந்துக்கொண்டனர். இதன்மூலம் தன்னம்பிக்கையுடன் சீத்தலுக்கு கால்களை பயன்படுத்தி வில்வித்தை கற்றுக்கொடுத்தனர் பயிற்சியாளர்கள். வெறும் 11 மாதங்களில் சீத்தல் வில்வித்தையில் முழுவதுமாக தேர்ச்சிப்பெற்றார்.

matt stutzman
matt stutzmani.ytimg.com

சீத்தல் வில்வித்தை பயிற்சியில் சேர்ந்த புதிதில் 50 முதல் 100 அம்புகளை விட்டு பயிற்சி பெற்றார். அவரின் விடாமுயற்சியினால் பிற்பாடு 300 அம்புகளை விடுவித்தார் சீத்தல். இதுவே இவர் விரைவில் தேசிய அளவில் பங்குப்பெற்று பதக்கங்கள் வாங்குவதற்கு காரணமானது.

உலகளவில் சீத்தல் தேவித்தான் ஆசிய பாரா விளையாட்டில் வில் வித்தை போட்டியில் கையில்லாமல் விளையாடி வெற்றிபெற்ற முதல் சாதனையாளார். 16 வயதுடைய சீத்தல் தேவி ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டினார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் வில்வித்தையில் பெண்கள் பிரிவில் இருவர் விளையாடும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் ஒருவர் விளையாடும் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார்.

இதற்கு பிரதமர் நரேந்திர மோதி தனது வாழ்த்துகளை X தளத்தில் மூலம் தெரிவித்தார். பின்னர், நேரில் அழைத்தும் பாராட்டினார். விடாமுயற்சியின் நாயகியாக விளங்கிவரும் சீத்தல் தேவிக்கு கடந்த ஆண்டு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசால் கௌரவிக்கப்பட்டார்

எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று நினைக்கும் அனைவருக்கும் சீத்தல் தேவி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். கால்கள் மூலம் வில்வித்தை பயிற்சி மேற்கொண்டு 11 மாதங்களில் சீத்தல்தேவியால் சாதிக்க முடிந்தது என்றால், அதற்கு அவரின் தொடர் முயற்சியே மிகப்பெரிய காரணமாகும். இவரின் தன்னம்பிக்கை மற்றும் இலக்கின் மீது உள்ள பிடிவாதம் வாழ்வில் என்ன நடந்தாலும் எது இல்லையென்றாலும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். குறை ஒன்றும் இல்லை என்பதை நிரூப்பித்தவர் சாதனைப்பெண் சீத்தல்தேவி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com