இன்னும் சில நாட்களில் பாரீஸில் பிரம்மாண்ட ஒலிம்பிக் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த இடத்தின் அருகில் இருக்கும் சாலையோர மக்களை பாரீஸ் அரசு அப்புறப்படுத்தியுள்ளது.
நினைவிருக்கிறதா? ஒருமுறை அமெரிக்கா அதிபர் இந்தியா வந்தபோது, அகமதாபாத்தில் ஏழை மக்கள் வாழும் வீடுகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக திரையிட்டு மறைக்கப்பட்டனர். இதே சூழ்நிலைதான் தற்போது பாரீஸிலும் நிகழ்கிறது. இன்னும் சொல்லப்போனால், இது உலகம் முழுவதும் நடக்கும் சம்பவம்தான். ஆனால், விரட்டும் கைகள் விரட்டிக்கொண்டும், ஓடும் கால்கள் ஓடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அதில் மாற்றமோ முன்னேற்றமோ எதுவும் இல்லை.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 26ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக உலகமுழுவதுலிமிருந்து ஏராளமான வீரர்கள் பாரீஸுக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். பாரீஸ் நகரில் புலம்பெயர்ந்த மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அவர்கள், சாலையோரங்களில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வீடற்ற புலம் பெயர்ந்த நபர்களுக்கு வீடு கட்டித் தருவதாக பிரான்ஸ் அரசு அண்மையில் அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு வீடும் கட்டித் தரப்படவில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது என்பதற்காக புலம்பெயர்ந்த நபர்கள் பேருந்து மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தெருவில் சுற்றித் தெரியும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் யார் வீடற்ற நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு அதில் பலரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சுமார் 60% பேர் தற்காலிக குடியிருப்பில் மட்டுமே தங்கி இருக்கிறார்கள். இது பிரான்ஸ் நாட்டின் அழகை கெடுக்கிறது என்று காரணம் காட்டி அரசு அவர்களை நாடு கடத்தியும் அல்லது பாரிஸ் நகரை விட்டு வெளியேற்றியும் வருகிறது.
ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிக்க, அவர்களுக்கு அடிப்படை தேவைகளை தந்து, அதன்மூலம் அவர்கள் முகத்தில் பார்க்கும் சந்தோசமும் ஒரு அழகுதான் என்பதை பாரீஸ் மறந்துவிட்டதா?
இனி அந்த மக்களின் நிலை என்ன?