

இன்றைய லீக் ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் அரங்கேறுகின்றன. இதில் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 13 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்த அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் ஜெயித்தால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும்.
பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி கண்டு 16 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்த தனது எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடலாம்.
இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் 37 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் பெங்களூருவும், 18-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. கோலி அதிரடியாக விளையாடி 58 ரன்னும், வெங்கடேஷ் அய்யர் 48 பந்துகளில் 73 ரன்னும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணியால் பெங்களூரு அணியின் மெகா இலக்கை எட்ட முடியாமல் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் 9-வது வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.