பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரிலிருந்து இரண்டாவது அணியாக வெளியேறுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதலாவதாக மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறாமல், தொடரிலிருந்து வெளியேறியது. இதனையடுத்து இரண்டாவதாக பஞ்சாப் அணி தொடரிலிருந்து வெளியேறுகிறது. ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டி தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஓப்பனராக களமிறங்கிய விராட் கோலி 92 ரன்களிலும், பட்டிதர் 55 ரன்களிலும், கிரீன் 46 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினார்கள். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வித்வாத் கவேரப்பா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், சாம் கரண் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
242 என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ஆனால், சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணி 17 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி வீரர்களை ஆல் அவுட்டாக்கியது. இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர்களில் வெறும் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் பஞ்சாப் அணிக்காக ரோசோவ் (61), பேர்ஸ்டோவ் (27), ஷஷாங்க் சிங் (37), ரன்கள் எடுத்தனர்.
பெங்களூரு அணியின் பவுலிங்கைப் பொறுத்தவரை சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஸ்வப்னில், லாக்கி ஃபெர்க்யுசன், கார்ன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனால் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
பெங்களூரு அணி தற்போது 10 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் உள்ளது. இனி விளையாடும் போட்டிகளில் வென்றால், ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. இருப்பினும், சென்னை அணி, டெல்லி அணி மற்றும் லக்னோ அணி விளையாடும் அடுத்தப் போட்டிகளின் வெற்றி தோல்வி பொறுத்தே பெங்களூரு அணி அடுத்த சுற்றிற்கு செல்லுமா? என்பது தெரியவரும்.