கிராமங்களின் வேலி ஓரங்களில் சர்வ சாதாரணமாகப் படர்ந்து காணப்படும் ஒரு தாவரக்கொடி பிரண்டை. சர்வ சாதாரணமாகக் கிடைப்பதாலேயே இதன் பயன் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இது தொட்டியில் வைத்து பலராலும் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட இந்த பிரண்டையை நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து துவையல் அரைத்து நமது உணவோடு சேர்த்துச் சாப்பிடுவது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மாறுபட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாக பலருக்கும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து விடுவது சர்வசாதாரணமாகி விட்டது. இதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவில் மாறுதல்கள் ஏற்பட்டு இதய வால்வுகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னையின் உச்சமாகவே பலருக்கும் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற பிரச்னைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே தங்கள் உணவில் அடிக்கடி பிரண்டை துவையல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகள் கரைந்து ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதயமும் இதனால் பலப்படுகிறது.
பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இது நாள்பட்ட வயிற்று வலி, ஜீரணக் கோளாறுகள், இரைப்பை அழற்சி, பசியின்மை, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் மாமருந்தாக விளங்குகிறது. பிரண்டை துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் சுறுசுறுப்பு கூடும். மூளை நரம்புகள் பலப்பட்டு நினைவாற்றல் பெருகும். அது மட்டுமின்றி, பற்களின் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவை நிறுத்தவும், வாயுப் பிடிப்பை குணமாக்கவும் கூட இது பெருமளவில் பயன்படுகிறது.
பிரண்டை கொடியை தினசரி காய்கறி கடைகளில் வாங்கி சுத்தம் செய்து சமையலுக்குப் பயன்படுத்தலாம். பிரண்டை கொடியை சுத்தம் செய்யும்போது கொஞ்சம் எச்சரிக்கையோடு அதை சுத்தம் செய்ய வேண்டும். அதாவது வெறும் கைகளில் இதன் மேல் தோல்களை அகற்றி சுத்தம் செய்கையில் விரல்களில் கடுமையான எரிச்சல் உண்டாகும். அதனால் சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்வது நல்லது.