“ப்ளீஸ் அவரை மறந்துடாதீங்க…” – பிசிசிஐ தேர்வுக் குழுவுக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை!

Sanjay Manjrekar
Sanjay Manjrekar

டி20 உலகக்கோப்பை நடைபெற இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், “அவரை டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் தேர்வு செய்ய மறந்துவிடாதீர்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் டி20 உலகக்கோப்பை போட்டிகள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளன. டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா என்பது அதிகாரப்பூர்வமானது. இதனையடுத்து, இந்த மாதம் இறுதியில் அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களே இந்திய அணியில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

சென்னை அணியின் மிடில் பேட்ஸ்மேனான சிவம் துபே சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர், அவர் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நேரடியாகவே கேட்டுக் கொண்டனர். அதேபோல், ரியான் பராக் மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருவதால், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்தன.

ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோர் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடரில் அவர்களின் ஆட்டம் மந்தமாக உள்ளதால், அவர்கள் தேர்வுசெய்யப்படுவது சந்தேகம்தான்.

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சுனில் நரேன் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து வருகின்றனர். அதேபோல், ரிங்கு சிங் 6 போட்டிகளில் 83 ரன்களை மட்டுமே எடுத்தாலும், 162.75 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆனால், பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்பதற்காக ரிங்கு சிங்கை உலகக்கோப்பையில் தேர்வு செய்ய மறந்து விடக்கூடாது என சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வுக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “ரிங்கு சிங்கிற்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நேரடியாகவே இந்திய அணிக்குள் வருவதற்குத் தகுதியானவர்தான். ஏனெனில், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளிலும், அவர் எந்தளவுக்கு நன்றாக விளையாடினார் என்பதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள். இந்திய அணியில் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர் முக்கிய வீரராக இருப்பதை நான் விரும்புகிறேன்.

அதேபோல நீண்ட காலமாக தடுமாறிய சஞ்சு சாம்சன் ஒரு வழியாக சிறப்பாக விளையாடத் துவங்கியுள்ளார். அவரைப் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் இந்திய டி20 அணிக்கு அவசியம்.” என்று பேசினார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com