
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியின் எட்டாவது சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் நாடிர்பெக் (5.5), சிந்தரோவ் (5.0), பிரக்ஞானந்தா (4.5), அர்ஜுன் (4.5) ஆகியோர் முதல் 4 இடத்தில் இருந்தனர். இந்த தொடரின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.
கடைசி சுற்றில் அர்ஜுன்-அரவிந்த் மோதிய ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த 19 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசட்டோரோ உடன் மோதினார். இந்த போட்டியில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களை தேர்வு செய்து விளையாடினார். பிரக்ஞானந்தா மற்றும் நோடிர்பெக் அப்துசட்டோரோ இடையேயான போட்டி பரபரப்பாக சென்ற நிலையில் 49-வது நகர்த்தலில் டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று நோடிர்பெக்கை தோற்கடித்து பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
உஸ்பெகிஸ்தான் தொடரில் வெற்றி பெற்று கோப்பை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17.10 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிச் சுற்றில் வென்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, ‘பிடே லைவ்’ தரவரிசையில் 2778.3 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருந்து முன்னேறி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (2776.6) 5-வது இடம் பிடித்துள்ளார். கார்ல்சன் (நார்வே, 2839.2), நகமுரா (அமெரிக்கா, 2807.0), பேபியானோ (அமெரிக்கா, 2784.2) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியாவின் 'நம்பர்-1' செஸ் வீரர் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியதுடன் உலக செஸ் தரவரிசையில் குகேஷை முந்தினார் பிரக்ஞானந்தா.
உஸ்பெகிஸ்தான் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. அதுமட்டுமின்றி இந்தாண்டில் மட்டும் இவர் வென்ற மூன்றாவது கோப்பை இதுவாகும். இதற்கு முன்னதாக கிராண்ட் செஸ், டாடா ஸ்டீல் தொடரில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே இந்தியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் டி குகேஷ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள நிலையில் தற்போது பிரக்ஞானந்தா 4வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் முதன்முறையாக டாப் 5 இடத்திற்குள் இரண்டு இந்தியர்கள் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் 2 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் பெருமையை பெற்றுத் தந்துள்ளது என்றே சொல்லலாம்.
உலக அரங்கில் இந்தியாவின் சாதனைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.