

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிர்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்ததுடன், உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
கிரிக்கெட் உலகில் ஒரு ஐகானாகவே திகழும் 29 வயதான ஸ்மிருதி மந்தனா, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் கேப்டனாகவும் பிரகாசித்து வருகிறார். இடதுகை பேட்டரான இவர் பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். 2013-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், பல சாதனைகளை படைத்துள்ளார்.
மராட்டியத்தை சேர்ந்த மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல பாலிவுட் சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள்.
இது குறித்து தகவல் கசிந்த நிலையில் பலாஷ் உலகக்கோப்பை போட்டியின் போது ஸ்மிருதியுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் பலாஷ் உடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா வருகிற நவம்பர் 23ம் தேதி (நாளை)இந்தூரில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரைச் சேர்ந்த 29 வயதான பலாஷ் மூச்சல், இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் தனது தனித்துவமான பங்களிப்புக்காக அறியப்படுகிறார்.
இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘ஸ்மிருதியும் பலாஷும் நம்பிக்கையில் வேரூன்றிய ஒரு பகிரப்பட்ட வாழ்க்கையை உருவாக்கட்டும், எப்போதும் ஒருவருக்கொருவர் துணை நின்று, அன்புடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் பலம் மற்றும் குறைபாடுகள் மூலம் ஒன்றாக வளரட்டும்’ என்று தனது வாழ்த்தில் பிரதமர் தெரிவித்து இருந்தார்.