இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியைக் கண்டுகளிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் ஆகியோர் இந்த கிரிக்கெட் மைதானதுக்கு வருகை தந்தனர். அப்போது இரு நாட்டு பிரதமர்களுக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் நாட்டு அணி கேப்டன்களுக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினர். அதன் பிறகு அவர்கள் ஒரு வாகனம் மூலம் அந்த மைதானத்தை சுற்றி ஊர்வலமாக வந்து, அங்கு கூடியிருந்த கிரிக்கெட் ரசிகர்களை நோக்கி கை அசைத்து உற்சாகப்படுத்தினர்.
அப்போது அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமருக்கு எடுத்துக் கூறினார். அதன் பிறகு இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து தற்போது விளையாடி வருகிறது.
முன்னதாக, நேற்றைய தினம் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அவருடன் அந்நாட்டு மந்திரிகள் உள்பட, 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு ஒன்றும் அவருடன் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை ஆகும்.