இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை, இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தங்க மங்கை என்று போற்றப்படும் பி.டி.உஷா, இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் 3 முறை பங்கேற்று முதல் 10 இடங்களுக்குள் வந்தவர். அவரது சாதனையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளைக் கொடுத்து கவுரவித்துள்ளது. மேலும் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பி.டி.உஷா (58), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இப்பதவிக்கு வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யாததால், பி.டி.உஷா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பி.டி.உஷா பேசும்போது ‘எனக்கு இப்பதவி கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார்.
நாங்கள் விளையாடிய காலத்தில் விளையாட்டு துறைக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது' என்று கூறினார்.