இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் பி.வி. சிந்து, ஒலிம்பிக் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சிந்து வரலாறு படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாறு படைத்தார். அவர் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வென்றவர் மற்றும் 2019 உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் BWF கவுன்சிலின் உறுப்பினராகவும், வாக்குரிமை கொண்ட உறுப்பினராகவும் பணியாற்றுவார். பி.வி. சிந்து, 2017ம் ஆண்டு முதல் இந்த ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். மேலும் 2020 முதல் உலக பேட்மிண்டன் சம்மேளன இன்டெக்ரிட்டி அம்பாசிடராகவும் இருந்து வரும் பி.வி. சிந்து, இந்தப் பதவிக்கு கணிசமான அனுபவத்தையும் செல்வாக்கையும் கொண்டு வருகிறார்.
‘ஒவ்வொரு வீரரையும் பிரதிநிதித்துவப்படுத்தவும், உண்மையிலேயே முக்கியமான அர்த்தமுள்ள, நீடித்த மாற்றத்திற்காகப் போராடவும் BWF உடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’, என்று பி.வி. சிந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.