பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது ராஜஸ்தான்!

பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது ராஜஸ்தான்!

ந்த வருடத்தின் ஐபிஎல் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேஷ்பாண்டே பந்து வீச்சில் 10 ரன்களுக்கு அவுட் ஆனார். சுழல் பந்தில் மிரட்டி வரும் ஜடேஜாவின் பந்து வீச்சில் தேவ்தத் படிக்கல் (38 ரன்கள்), அவருக்கு அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து ஆட வந்த அஸ்வின் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் ஹோல்டர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தை விட்டு வெளியேறினார். இறுதி வரை களத்தில் நின்று விளையாடிய ஹெட்மயர்30 ரன்களும், ஜாம்பா ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாட வந்த சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வேவும் ருதுராஜும் ஆட வந்தனர். முதல் ஓவரை வீசி சந்தீப் சர்மா ஆட்டத்தைத் தொடங்கி வைத்தார். 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது ஓவரில் ருதுராஜ் சந்தீப் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்தார் ரஹானே. வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தால் சென்னை ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்திய ரஹானே, 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அஷ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து ஆட வந்தார் டூபே. அவர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஷ்வின் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ஆட வந்தார் மொயின் அலி. அவரும் 10 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் பவுன்ரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆட வந்த ராயுடுவும் ஒரு ரன் எடுத்த நிலையில் சஹல் பந்து வீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்து ஆட வந்தார் ஜடேஜா. நிலைத்து நின்று ஆடிய கான்வே 37 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்த நிலையில் சஹல் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து, பெரும் கர கோஷத்துக்கு மத்தியில் களம் இறங்கிய கேப்டன் தோனி ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வெற்றிக்கு நெருக்கமாக மேட்சைக் கொண்டு சென்றனர். கடைசி ஓவரை வீச வந்தார் சந்தீப். தனது திறமையான பந்து வீச்சால் ரன்களைக் கட்டுப்படுத்தி அந்த ஓவரை வீசினார். கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த தோனி ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆட்ட முடிவில் 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை அடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com