
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான, அதிரடி பேட்ஸ்மேனாக இளம் வீரர் ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் 2 ஒருநாள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிங்கு சிங் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட அவர் இந்த சீசனில் 13 ஆட்டங்களில் 206 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்திய அணிக்காக இரண்டு ஒரு நாள் மற்றும் 33 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான ரிங்கு சிங்குக்கும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான பிரியா சரோஜிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழக்கம் இருந்தது. அந்த பழக்கம் இப்போது திருமண பந்தத்தில் இணைகிறது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் ரிங்கு சிங்- பிரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8-ந்தேதி லக்னோவில் நடக்கிறது. இந்த தகவலை பிரியாவின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ் தெரிவித்தார். நாட்டின் இளம் எம்.பி.க்களில் ஒருவரான 26 வயதான பிரியா சரோஜ், சட்டப்படிப்பை முடித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், மச்சிலிஷர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
நிச்சயதார்த்தம் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக நடக்க இருப்பதாகவும், இதில் குடும்பத்தினர், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் அவரது தந்தை துபானி குறிப்பிட்டார். ரிங்கு- பிரியா இவர்கள் இருவரின் திருமணம் பராம்பரிய முறைப்படி வாராணசியில் உள்ள ஹோட்டல் தாஜில் இந்தாண்டு நவம்பர் 18-ந்தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்துக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.