கலவரமானது கால்பந்துப் போட்டி நிலவரம்

கலவரமானது கால்பந்துப் போட்டி நிலவரம்

கால்பந்து போட்டிகள் கலவர பூமியானது அடிக்கடி நிகழ்வதுதான்.  உணர்ச்சிவசப்படும் விளையாட்டு வீரர்கள் ஒருபுறமிருக்க கட்டுப்படுத்தவே முடியாத கால்பந்து ரசிகர்கள் (வெறியர்கள்) எண்ணிக்கை கணிசமானதுதான்.

அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகளின் ஆதரவாளர்கள் கட்டார் வீதிகளில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட காட்சிகள் வேகமாகப் பரவி வருகின்றன.  உள்ளூர் காவல் துறையினர் அங்கே இல்லாதிருப்பதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சி பிரிவு அதிர்ச்சிகளை அளித்திருக்கிறது.  அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா அணி தோற்கடித்திருப்பது யாருமே எதிர்பாராத ஒன்று.  சிறப்பாக எதிர்பார்க்கப்பட்ட மெக்சிகோ போலாந்து அணியுடன் ஆடிய போட்டியில் டிரா செய்திருக்கிறது.  இரு தரப்புக்கும் கோல் எதுவுமில்லை.

லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மிக எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா மற்றும்  மெக்சிகோ அணிகள் பாயிண்ட்டுகள் பெறத்  தவிக்கும் நிலைக்கு உள்ளாகியிருப்பது அந்த நாட்டுக்கு ஆதரவான ரசிகர்களை மிகவும் டென்ஷன்படுத்தி இருக்கிறது

உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இந்தோனேசியாவில் கால்பந்து கலவரங்கள் உச்சத்தை அடைந்து விட்டது நினைவிருக்கலாம்.

அங்கே அரேமா அணியும் பெர்சிபயா அணியும் மோதின.    கடும் எதிரியான பெர்சிபயா அணியிடம் அரேமா அணி தோற்றுவிட்டது. 

அரேமா அணி இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை.  அதுவும் இங்கு தங்கள் பரம வைரியிடம்  தோல்வியடைந்ததை சில ரசிகர்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.   அது எப்படி 23 வருடங்கள் உள்ளூர் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று வந்த தங்கள் அணி தோல்வி அடையலாம்? எதிரணி விளையாட்டு வீரர்களை நோக்கி பாட்டில்களை தூக்கி அடித்தார்கள்.  கால்பந்து நிர்வாகிகளும் இவர்கள் குறியிலிருந்து தப்பவில்லை.  ஐந்து போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 

1964-ம் ஆண்டிலேயே கால்பந்து போட்டிகளில் பெரும் கலவரங்கள் நடைபெறுவது தொடங்கிவிட்டது.   பெரு நாட்டில் லிமா சர்வதேச மைதானத்தில் பெரு – அர்ஜென்டினா அணிகள் ஒலிம்பிக் தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் மோதின.   53,000 பேர் மைதானத்தில் நிரம்பியிருந்தனர்.  ஒரு ‘ஃபெளல்’ தீர்ப்பை நடுவர் அளிக்க, இரு பார்வையாளர்கள் மைதானத்துக்குள் புகுந்து அந்த நடுவரைத் தாக்க, கலவரம் தொடங்கியது.  இருதரப்பு ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 320 பேர் இறந்தனர்.

 ‘தீவிர’ ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டு இன்னும் என்னென்ன கலவரங்களை உலகக் கோப்பைப் போட்டிகளில் எதிர்கொள்ளப் போகிறதோ!

கடந்த இரு நாட்களில்...

* ஜெர்மனி அணி ஜப்பானிடம் 1-2 கணக்கில் தோல்வியுற்றது.

* ஸ்பெயின் அணி 7 கோல்கள் போட்டு கோஸ்டாரிகா அணியை வென்றது.  கோஸ்டாரிகா ஒரு கோல் கூட போட முடியவில்லை.

* பெல்ஜியம் அணி கனடாவை 1-0 கோல் கணக்கில் வெற்றி கண்டது.

* சுவிட்சர்லாந்து அணி கேமரூனை வென்றது, 1-0 என்ற கோல் கணக்கில்.

* உருகுவே மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டுமே எந்த கோலும் போடாமல் போட்டியை டிராவில் முடித்தன. 

* குரேஷியா அணியும் மொரெக்கோ அணியும் மோதிய போட்டியிலும் இரு அணிகளும் கோல்  எதுவும் போடாமல் தங்கள் போட்டியை முடித்துக் கொண்டன.

                                                ************

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com