நேற்றைய வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத தோல்வியைத் தழுவியதையடுத்து, இத்தொடரில் 2-0 என்ற நிலையில் தோல்வியடைந்தது. இந்நிலையிலும், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நேற்று நடந்த போட்டியில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
2வது ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்ற நிலையில், வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
நேற்றைய போட்டியில் இந்தியா தோற்றிருந்தாலும், ரோஹித்தின் சாதனை ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
விரல்களில ஏற்பட்ட காயத்தின் காரணமாக ரோஹித் சர்மா துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை. துவக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆனால், முன்னணி வீரர்கள் யாரும் சரியாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்னும், அக்ஸர் பட்டேல் 56 ரன்னும் எடுத்ததன் மூலம் இந்திய அணி 45 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், காயத்தின் காரணமாக விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா களத்தில் இறங்கினார்.
இந்திய அணிக்கு 65 ரன்கள் தேவை என்ற நிலையில், ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை மளமளவென குவித்தார். கடைசி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 12 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், ரோஹித் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து வெற்றிக்கு அருகே கொண்டு சென்றும், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இருந்தும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசி, 51 ரன்களை எடுத்த ரோஹித் ஒரு பிரம்மாண்ட சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
இப்போட்டியில் ரோஹித் சர்மா, 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இதுவரை 502 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் உலகளவில் இந்த ரெக்கார்டை செய்யும் 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயில் இச்சாதனையை செய்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிறிஸ் கெயில் இச்சாதனையை செய்ய 447 போட்டிகளில் விளையாடி 500 சிக்ஸர்களை அடித்தார். ஆனால் ரோஹித் சர்மா வெறும் 428 போட்டிகளிலேயே 500 சிக்ஸர்களை அடித்து சாதனையை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.