இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பிடம் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர்களின் இந்த முடிவு, விளையாட்டு உலகிலும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நீடித்த இவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வந்திருப்பதாக சாய்னா தனது இன்ஸ்டா வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில், "வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே, காஷ்யப் பருபள்ளியும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். அமைதி, முன்னேற்றம் மற்றும் ஓய்வுக்கான பாதையை நாங்கள் இருவரும் தேர்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவை புரிந்துகொண்டு, தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைவருக்கும் நன்றி" என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப் இருவரும் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். நீண்ட நாள் காதலர்களான இவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம், இந்திய விளையாட்டு உலகின் மிகவும் கொண்டாடப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. திருமணத்திற்குப் பிறகு, காஷ்யப் தனது போட்டி வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று, சாய்னாவுக்கு பயிற்சியாளராகவும், உந்துசக்தியாகவும் இருந்தார். சாய்னாவுக்கு ஏற்பட்ட பல காயங்களில் இருந்து மீண்டு வர காஷ்யப் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
சாய்னா நேவாலின் இந்த திடீர் அறிவிப்பு, இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும், அவர் தனது பதிவில் எந்த குறிப்பிட்ட காரணத்தையும் குறிப்பிடவில்லை. பரஸ்பர புரிதலுடனும், மரியாதையுடனும் பிரிந்திருப்பதாக சாய்னா குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ரசிகர்கள் தங்களது வருத்தத்தையும், சாய்னாவுக்கும் காஷ்யப்புக்கும் எதிர்கால வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சாய்னா தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, மேலும் பல வெற்றிகளைப் பெறுவார் என்றும் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமீபத்தில், சாய்னா ஆர்த்ரைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும் யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.