உப்புக்கு "நோ" சொல்லுங்க: WHO எச்சரிக்கை!

உப்புக்கு "நோ" சொல்லுங்க: WHO எச்சரிக்கை!
Published on

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனமானது தனிமனிதர்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவை வரையறுத்துள்ளது. அதை வெகு தீவிரமாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன? காட்சி ஊடகமொன்றில் பொது சுகாதார வல்லுநரான டாக்டர் அமலோற்பவநாதன் இது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

5 கிராம் உப்பு போதும்!

WHO பரிந்துரையின் படி நாளொன்றுக்கு ஒரு நபர் 5 கிராம் உப்பு மட்டுமே சேர்த்துக் கொண்டால் போதும். அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்தால் போதும் அதைத் தாண்டி அளவு அதிகரிக்கக் கூடாது என்கிறது. அது ஏன் என்று இப்போது பார்த்து விடலாம்.

25 லட்சம் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்!

ரத்த அழுத்தத்துக்கு முக்கியமான காரணம் சமையலில் நாம் உபயோகப்படுத்தும் உப்பு.சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் ஐந்து கிராமுக்கும் குறைவாகத்தான் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், WHO சமர்பித்த ஆய்வின் படி பார்த்தால் இந்தியாவில் நாம் அவர்கள் பரிந்துரைத்தை அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக அளவில் உப்பு சேர்த்துக் கொள்கிறோம். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 11 கிராம் உப்பு சேர்த்துக் கொள்கிறோம்.இந்த உப்பை மட்டும் நாம் குறைத்துக் கொண்டால் போதும் உலகம் முழுவதும் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் உயிரிழப்புகளை நம்மால் தவிர்க்க முடியும் என்று WHO கூறுகிறது.

சால்ட் ரேங்கிங் தீர்மானம்!

ஆக, இத்தனை முக்கியமான உயிர்க்கொல்லியாக இருக்கக் கூடிய உப்பு உட்கொள்ளும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக WHO 2013 ல் 194 நாடுகளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அதில் 2023 க்குள் நாம் எவ்வளவு உப்பை உட்கொள்கிறோமோ அதிலிருந்து 30% பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றொரு தீர்மானத்தை முன்னெடுத்தது. ஆனால், இப்போது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளைப் பார்த்தால் அந்த தீர்மானத்தை நாம் இன்னும் எட்டவே இல்லை என்பது தெளிவானது. உலகநாடுகளிடையே உப்பு நுகர்தல் அளவைக் குறிக்க சால்ட் ரேங்கிங் என்றொரு அளவீட்டைக் குறிப்பிடுவார்கள். அதில் நான்கு நிலைகள் உள்ளன. அதில் 4 ஆம் நிலையை எட்டி விட்டால் உப்பு நுகர்தல் அளவைக் குறைத்ததில் நீங்கள் பெஸ்ட் என்று அர்த்தம். 1 என்றால் நீங்கள் இன்னும் உப்பைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யத் தொடங்கவே இல்லை என்று அர்த்தம். இப்போதைக்கு இந்தியா அந்த சால்ட் ரேங்கிங் 2 மட்டுமே பெற்றிருக்கிறது. படு மட்டமாகவும் இல்லாமல், ஆரோக்யமான நிலையிலும்

இல்லாமல் இது கொஞ்சம் அவஸ்தையான நிலை தான். ஏனெனில், விழிப்புணர்வு இருந்தால் சால்ட் ரேங்கிங் 4 பெற எத்தனை சாத்தியக்கூறுகள் உண்டோ, அதே விதமான சாத்தியக்கூறுகள் சால்ட் ரேங்கிங் -1 பெற்று அதலபாதாளத்தில் விழவும் வாய்ப்புக்கள் உண்டு. எனவே உப்பு பயன்படுத்தும் விஷயத்தில் நமக்கு இன்னும் விழிப்புணர்வு அதிகம் தேவைப்படுகிறது என்று தான் கருதவேண்டியதாயிருக்கிறது.

சர்க்கரை நோய் போல உப்புச்சத்தும் தீவிர வியாதி தான்!

இந்தியாவில் நாம் சர்க்கரை வியாதி குறித்து அதிகமும் பேசி வருகிறோமே தவிர, உப்பு குறித்துப் பெரிதாக பேசுவதோ, கவலைப்படுவதோ இல்லை. உப்பை மட்டும் குறைத்தோம் என்று வையுங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம், அத்துடன் இதய நோய்களை 50% க்கும் மேல் இல்லாமலாக்கலாம்.கூடுதலாக ரத்த அழுத்தத்தினால் வரக்கூடிய பிற வியாதிகளையும் கூட மிக எளிதாக நம்மால் இல்லாமலாக்க முடியும்.

தேசத்தின் பாதுகாப்புக்காக உப்பைக் குறையுங்கள்!

ஆனால் பாருங்கள், நாம் இப்போது தினமும் சராசரியாக 11 கிராம் உப்பு சேர்த்துக் கொள்கிறோம், உண்மையில் வயது வந்தோருக்கு நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும், குழந்தைகளுக்கு அதை விடக்குறைவாகக் கொடுத்தாலும் போதும். ஆகவே நம்முடைய உடல்நலனுக்காகவும், இந்த தேசத்தின் பாதுகாப்பு நலனுக்காகவும் கூட நாம் உப்பைக் கைவிடவேண்டியவர்களாகத் தான் இருக்கிறோம்

ரத்த அழுத்த நோயால் 2 ட்ரில்லியன் டாலர் இழப்பு!

தேச நலன் எப்படி உப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று குழப்பமடைந்து விடாதீர்கள். காரணம் இருக்கிறது. உப்பினால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளுக்கான சிகிச்சைகளுக்காக 2012 இல் இருந்து 2030 வரையிலுமாக நீங்கள் கணக்கிட்டீர்கள் என்றால் 2 ட்ரில்லியன் டாலர்களை நாம் இழந்திருக்கிறோம். இத்தனை பெரிய இழப்பை உப்பைக் குறைப்பதின் மூலமாக நம்மால் ஈடுகட்ட முடியும்.

உப்பைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார ரீதியாக தேச நலனை இப்படிக் காப்பாற்றிக் கொள்ள முடிவதுடன், ஆரோக்யத்தைப் பொறுத்தவரை ரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் வாயிலாக ஸ்ட்ரோக் வந்து நெடுநாட்களாக வீட்டில் படுத்துக் கிடக்கும் நிலையையும் நம்மால் தவிர்க்க முடியும்.

சால்ட் பிரிசர்வ்டு டயட்டைத் தவிருங்கள்!

அத்துடன் சால்ட் பிரிசர்வ்டு டயட் என்பார்கள் இந்த கருவாடு, உப்புக்கண்டம், ஊறுகாய் போன்றவற்றை அவற்றை நுகரும் வேகத்தையும் கட்டுப்படுத்தினோம் என்றால் வயிற்றுப் பகுதியில் வரக்கூடிய கேன்சரையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவில் நிகழும் மரணங்களில் 35% நோய்களானது ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்களாகவே இருக்கின்றன. ரத்த அழுத்தம் வருவதற்கு முந்தைய நிலையான Pre Hyper Tension நோயானது இந்தியாவில் சரிபாதி ஆண்களுக்கு இருக்கிறது. சொல்லப்போனால் இதில் பெண்களைக் காட்டிலும் இதில் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 40% பெண்களுக்கும் இந்த பாதிப்பு உண்டு. அவர்களுக்கும் என்றைக்கு வேண்டுமானாலும் ரத்த அழுத்தம் வரலாம் என்கிற நிலை தான். இவர்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் உப்பைக் குறைப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும். ஆக இன்றைக்கு இந்திய ஜனத்தொகையில் சரிபாதி மக்கள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உப்பின் அளவைக் கணிசமாகக் குறைத்து தான் ஆக வேண்டும்.

இந்திய அரசின் Eat Right India பிரச்சாரம்!

இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு சுயபுத்தியுடன் கூடிய பொறுப்புணர்வு வேண்டும். எது பாதுகாப்பானது எனும் தெளிவு வேண்டும். அவர்களாகச் செய்யாத பட்சத்தில் அரசும் சும்மா இருந்து விடவில்லை. இந்திய அரசின் உணவு சுகாதார அமைப்பானது “Eat Right India" என்றொரு பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறது. அதன் மூலமாக பொதுமக்களுக்கு உப்பு நுகர்தலின் விழிப்புணர்வு எச்சரிக்கைகள் புகட்டப்படுகின்றன. நம் பங்குக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், நம் சமையல் அறைகளில் உப்பின் அளவைக் கணிசமாக நாம் குறைத்தே ஆக வேண்டும். அது மட்டுமல்ல, உணவருந்தும் டைனிங் டேபிளில் உப்பு டப்பாவை இனிமேல் தவிர்த்து விடுங்கள். அது மட்டுமல்ல, வெளியில் இருந்து வாங்கக்கூடிய நூடுல்ஸ், பிஸ்கட்ஸ், பிற துரித உணவுகளில் எவ்வளவு உப்பு கலந்திருக்கிறது என்று தொடர்ந்து கண்காணியுங்கள். ஏனென்றால் நான்கு பேர் கொண்ட ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் சேர்த்து ஒருநாளைக்கு 3 டீஸ்பூன் உப்பு போதுமானது. அதைக் கண்காணிக்கத் தவற வேண்டாம், ஏனென்றால், அப்போது தான் நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com