நீண்டநாள் உயிர்வாழ ஸ்வீட்டுக்கு நோ சொல்லுங்க!

நீண்டநாள் உயிர்வாழ ஸ்வீட்டுக்கு நோ சொல்லுங்க!

இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் அதிக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை India DiaBetes [INDIAB] Study என்ற பெயரில் மிகப் பிரபலமான மருத்துவ இதழான 'தி லான்செட்' (The Lancet) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 1,13,043 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 33,537 பேர் நகர்ப்புறத்தில் இருந்தும், 79,506 பேர் கிராமப்புறங்களில் இருந்தும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆய்வின்படி, நீரிழிவு நோயைப் பொறுத்தவரையில் தேசிய அளவில் நோய் பரவல் 11.4 சதவீதமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கோவா மாநிலத்தில் 26.4 சதவீதமும் குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4.8 சதவீதமும் நோய் பரவல் உள்ளது. இதன்படி இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் 15.3 சதவீதத்தினர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலை நிலையில் இருப்பது (pre diabetes) ஆய்வில் தெரிய வந்த நிலையில். அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 31.3 சதவீத பேரும், குறைந்தபட்சமாக மிசோரம் மாநிலத்தில் 6.8 சதவீத பேரும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளனர்.இதில் தமிழகத்தில் நீரிழிவு நோய்ப் பரவல் 14.4 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் பரவல் 10 சதவீதத்திற்கு அதிகமாகவும், கிராமபுறங்களில் 7.5 முதல் 9.9 சதவீதம் வரை உள்ளது. தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய நிலையில் நோய்ப் பரவல் சதவீதம் 10 முதல் 14.9 வரை உள்ளது. நகர்ப்புறங்களில் இது 10 முதல் 14.9 வரையும், கிராமப்புறங்களில் இது 5 முதல் 9.9 சதவீதம் வரையும் உள்ளது என ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com