அமெரிக்காவின் உலக மல்யுத்த பொழுதுபோக்கு அமைப்பு (World Wrestling Entertainment) நடத்தும் மல்யுத்தக் காட்சிகள் மிகவும் பிரபலமாகியுள்ளன. ‘எல்லாமே செட்டப்புதான்‘ என்ற விமரிசனத்தை அதிகம் கொண்டிருக்கும் விளையாட்டு இது. முக்கியமாக இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் நேயர்கள், நிகழ்ச்சியில் வேண்டாதன நீக்கி, சுவாரஸ்யமானதைச் சேர்த்த சாராம்சத்தைதான் பார்க்கிறார்கள். ‘அடிப்பது போல அடிக்கிறேன், விழுவதுபோல விழு என்ற பாசாங்கு நாடகம். காயம் படுதலும், தாக்கப்பட்ட வலியால் அலறுவதும், அதை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவார ஆர்வத்துடன் பார்ப்பதும் எல்லாமே செயற்கை‘ என்று விமரிசிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் போட்டியின் படத் தொகுப்பு அத்தனை அற்புதமாக, உண்மைபோன்றே இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை மல்யுத்தம் என்றால் உடனே தாராசிங்தான் நினைவுக்கு வருவார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தாராசிங் ரந்தாவா என்ற முழுப்பெயர் கொண்ட இவர், உலகின் மிகச் சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்தவர். அமெரிக்கா, கானடா நியுசிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வீரர்களை அவரவர் நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் வென்று புகழ் பெற்றவர். 1983ம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் வென்று அந்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற தாராசிங், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். ஆனால் ராமாயணம் ஹிந்தி தொலைக்காட்சித் தொடரில் ஹனுமானாகக் காட்சியளித்தபோதுதான் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
இவரைப் போலவே நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு வீரர், கிங்காங், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இவரும் தாராசிங்கும் மோதிக் கொள்கிறார்கள் என்றால் அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழியும். இந்தியாவில் குறிப்பாக பம்பாயிலும், தமிழ்நாட்டிலும் இவ்விருவரும் மோதிக்கொண்ட போட்டிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை ஏற்பாட்டாளர்களுக்கு வாரி வழங்கியிருக்கின்றன. பார்வையாளர்களைத் திரட்டுவதற்காகப் பல தந்திர உத்திகள் கையாளப்பட்டன.
பம்பாயில் இத்தகைய ஒரு போட்டியின்போது, முன்னேற்பாடாக, இவர்கள் இருவரும் ஒரு கடையில் சந்தித்துக் கொள்வதாகவும், அப்போது இருவருக்கிடையே வாய்ச்சண்டை, கைகலப்பு என்று ஏற்படுவதாகவும், அதனால் கடையில் பல பொருட்கள் உடைக்கப்படுவதாகவும், இறுதியில் அவ்விருவரையும் அவரவர் பாதுகாவலர்கள் பிரித்து தனித்தனியே அழைத்துச் செல்வதாகவும், அப்போது இருவரும் பரஸ்பரம் அடுத்த நாள் போட்டியில் ‘உன்னைக் கொன்று போட்டு விடுகிறேன்‘ என்று சபதம் செய்வதாகவும் திட்டமிட்டு இச்சம்பவங்களை நிறைவேற்றினார்கள். அப்போது இந்த மோதலைக் கண்ட மக்கள், அதைப் பலருக்கும் பரப்பி மறுநாள் அரங்கை முற்றிலுமாக ஆக்ரமித்தார்கள். அன்றைய போட்டியின் வசூல் ஏழு லட்ச ரூபாய் – 1950களில்! ஏற்கெனவே திட்டமிட்டதுதான் என்பதால், கடையில் இவர்கள் ‘சண்டை‘யால் நாசமான பொருட்களுக்கு உடனேயே பணமாக ஈடு செய்து விட்டார்கள்!
பணவசூலுக்கான இந்த உத்தியை பம்பாய் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் – சின்ன அண்ணாமலை, சுதந்திரப் போராட்ட வீரர், புத்தகப் பதிப்பாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் பேச்சாளர்.
தமிழ்நாட்டிலும் தாராசிங்-கிங்காங் குஸ்தி போட்டி நடந்தது. இங்கேயும் ஒரு சமயம், கிங்காங் தன் நெற்றி மடிப்புகளிடையே பிளேடால் ஒரு கீறல் உண்டாக்கிக் கொள்வதாகவும், போட்டியின்போது தாராசிங் அவருடைய நெற்றியைத் தாக்குவதாகவும், அப்போது கீறலிலிருந்து பெருகும் குருதியை நடுவரின் வெள்ளை வெளேர் சட்டையில் தாராசிங் தடவுவதாகவும், முன்னேற்பாடு செய்து கொள்ளப்பட்டது. அவ்வாறு ரத்தத்தைக் கண்ட ரசிகர்கள் வெறியுடன் ஆரவாரம் செய்தார்கள். சின்ன அண்ணாமலையுடன் இந்த உத்திக்கு மெருகு கொடுத்தவர், அந்நாளைய பிரபல எழுத்தாளர் சாவி. (பார்க்க – சாவி எழுதிய ‘பழைய கணக்கு‘ புத்தகம்)
தாராசிங் – கிங்காங் மோதல் மாதிரி இட்டுக்கட்டிய மல்யுத்த விளையாட்டுப் போட்டிகள் எப்போதாவது நடந்தாலும், சீரியஸான போட்டிகளும் நடக்காமலில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகளைவிட, பிற நாட்டு வீரர்களுடனான போட்டிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.