இந்த ஆண்டு ரஞ்சி ட்ராஃபியில் சிறப்பாக விளையாடி வரும் சாய் கிஷோர் பற்றி, ஷார்துல் தாக்கூர் "இவர்தான் அடுத்த ரவீந்திர ஜடேஜா" என்றுப் பாராட்டியுள்ளார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான சாய் கிஷோர் இந்த முறை ரஞ்சி ட்ராஃபியில் தமிழ்நாடு அணி கேப்டனாக செயல்படுவதோடு, பந்துவீச்சிலும் துவம்சம் செய்து வருகிறார். இந்த ஆண்டுக்கான ரஞ்சி ட்ராஃபி தொடரில் 53 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அரை இறுதிப் போட்டியில் கூட மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலிருந்தே சாய் கிஷோரை அனைவரும் ரவிந்திர ஜடேஜா என்றுப் பாராட்டி வருகின்றனர். அதேபோல் அவருக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரஞ்சி ட்ராஃபியின் அரையிறுதி போட்டியில் மும்பை அணியில் விளையாடி சதம் அடித்த ஷார்துல் தாக்கூர், சாய் கிஷோரைப் பற்றி பேசியிருக்கிறார். “அவர் மிகச்சிறப்பாகப் பந்து வீசினார். நீண்ட காலத்திற்குப் பிறகு ஜடேஜா போலவே ஒரு தரமான இடது கை பந்துவீச்சாளரைப் பார்க்கிறேன்” என்று பேசினார்.
சில மாதங்களுக்கு முன்னரே இந்திய டி20 போட்டியில் விளையாட சாய் கிஷோருக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்று இந்திய அணியில் விளையாடிய சாய் அவ்வளவாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன்பின் விளையாடிய சில போட்டிகளில் கூட அவர் சரியாக விளையாடவில்லை.
ஆனால் தற்போது ரஞ்சி ட்ராஃபியில் மீண்டும் ஃபார்மிற்குத் திரும்பிய சாய் கிஷோர், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வெறும் 15 இன்னிங்ஸில் 53 விக்கெட்டுகளை எடுத்து விக்கெட் மழைப் பொழிய காரணமானார். அதேபோல் தமிழக அணியை அரையிறுதி வரைக் கொண்டுச் சென்று விட்டார். தமிழ்நாட்டிலிருந்து ரஞ்சி ட்ராஃபிக்கு சென்று 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்குமுன் வெங்கட்ராகவன் என்றத் தமிழக வீரர் 1972 முதல் 73 ஆண்டுகளில் விளையாடிய ரஞ்சி ட்ராஃபியில் 58 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்பின் ஆஷிஷ் கபூர் 1999ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி ட்ராஃபியில் 50 விக்கெட்டுகளை எடுத்தார். இவர்கள் இரண்டு பேர் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து ரஞ்சி ட்ராஃபிக்குச் சென்று 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். இவர்களது வரிசையில் இப்போது சாய் கிஷோர் இணைந்து இருப்பது பாராட்டக்கூடியதாகும்.