தனது வாழ்நாளில் தான் பணியாற்றியவர்களிலேயே சிறந்தவர் ஸ்ரேயஸ் என்று ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.
இந்தியாவில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி ஆவார். அதேபோல், கிறிஸ் கெயில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர். லசித் மலிங்கா அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் ஆவார். அந்தவகையில் இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இந்த மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடருக்காக அனைத்து வீரர்களும் களமிறங்கி பயிற்சி செய்து வருகிறார்கள். அதேபோல், முன்னாள் வீரர்கள், பயிற்சியார்கள் அனைவரும் தங்களது கருத்துக்களையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படித்தான் தற்போது ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்தே ரிக்கி பாண்டிங் இருக்கிறார். ஆம்! 2008 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். மொத்தம் 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 91 ரன்கள் எடுத்துள்ளார்.
அதன்பின்னர் பயிற்சியாளராக களமிறங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றார். 2018 முதல் 2023 வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
பஞ்சாப் கிங்கின் புதிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்.
அந்தவகையில் ஸ்ரேயஸ் ஐயர் குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதைப் பார்ப்போம்.
"ஸ்ரேயாஸ் ஐயருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். டெல்லியில் நீண்ட காலமாக எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருந்தது.
நான் பணியாற்றிய சிறந்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஒருவர். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் ஐ.பி.எல். கோப்பையை வென்ற கேப்டன். இதைவிட அதிகமாக எதையும் அவரிடம் கேட்க முடியாது. சில நாட்கள் முன்னர்தான் எங்கள் அணியில் இணைந்தார். ஒரு கேப்டனாக முத்திரைப் பதிக்கவுள்ளார். அணியாக இணைந்து நாங்கள் செயல்படுவோம். எந்த அணியிலும் கேப்டன்-பயிற்சியாளர் உறவு மிக முக்கியமானது. அந்த வகையில் எங்களிடம் மிகவும் வலுவான பிணைப்பு இருப்பதை நான் அறிவேன்" என்று பேசினார்.