வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தனது நீண்டகால முதுகுப் பிரச்சினைக்காக ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷ்ரேயஸ் ஐயர் தனது நீண்டகால முதுகுப் பிரச்சனையைக் கையாள "ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக" பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், ஐயரின் இந்த முடிவை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ஷ்ரேயஸ் ஐயரின் இந்த முடிவைப் பற்றி பிசிசிஐ பொது மேலாளர் அபய் குருவில்லாவிடம் கேட்டபோது, "நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று பதிலளித்ததாக ரெவ்போர்ட்ஸ் (Revsports) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். முதல் போட்டி டிரா ஆன நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி நேற்று (செப். 23) லக்னோவில் தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, இந்தியா ஏ அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தனது பொறுப்பிலிருந்து விலகினார். இதனால், இந்தியா ஏ அணியின் துணை கேப்டன் துருவ் ஜூரேல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ஷ்ரேயஸ் ஐயர் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) தெரிவித்தார். இதையடுத்து, அவர் உடனடியாக லக்னோவிலிருந்து தனது சொந்த ஊரான மும்பைக்குத் திரும்பிவிட்டார்.இந்த திடீர் முடிவுக்கு முதுகுவலியும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது
ஷ்ரேயஸ் ஐயரின் முதுகுப் பிரச்சனை புதியதல்ல. 2023-ஆம் ஆண்டு, ஐசிசி உலகக் கோப்பைக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மும்பை ரஞ்சி டிராபி போட்டிகளிலும் ஐயர் பங்கேற்கவில்லை. அவரது முதுகு வலி மிகவும் தீவிரமாக இருந்ததால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். எனினும், மீண்டும் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டார்.
30 வயதான ஐயர் இந்திய அணியின் முக்கியமான வீரர். ஆசிய கோப்பை 2025 அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகினாலும், போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எடுத்த இந்த முடிவு, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்களை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.
எனினும், இது ஒரு தற்காலிக ஓய்வு என்றும், அவர் தனது உடற்தகுதியை மேம்படுத்தவும், மீண்டும் மீண்டும் வரும் முதுகுப் பிரச்சனையை சரிசெய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மும்பை அணிக்காக வரவிருக்கும் ரஞ்சி டிராபி தொடரையும் அவர் தவறவிடுவார். 70 ரெட்-பால் போட்டிகளில் விளையாடியுள்ள ஐயருக்கு, அவரது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று கருதப்படுகிறது.
நல்ல செய்தி என்னவென்றால், ஸ்ரேயஸ் ஐயர் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட முழுமையாகத் தயாராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்-பால் தொடரில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.