வீட்டில் முதல் நாள் சமைத்த சாதம் மிஞ்சிப் போனால் என்ன செய்வீர்கள். கோவிட் காலத்திற்கு முன்பு எப்படியோ... ஆனால், இப்போதெல்லாம் பழைய சாதம், பழைய தயிர், பழைய குழம்பு எல்லாவற்றைக் கண்டும் இன்றைய தலைமுறையினர் அச்சப்படுகின்றனர். சில வீடுகளில் மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி சில உப்புக்கற்களைத் தூவி மறுநாள் காலையில் பழங்கஞ்சியாகப் பயன்படுத்தி வருவது வழக்கமென்றாலும் இன்று பெரும்பான்மையான மக்கள் இதை மறந்துவிட்டார்கள் அல்லது விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. ஃபாஸ்ட் ஃபுட்கள் என்று சொல்லப்படக்கூடிய துரித உணவுகளுக்குப் பழகிப் போன நாக்குகளுக்கு பழைய சோறு அத்தனை ருசிப்பதில்லை. ஆனால், அதன் அருமைகளைத் தெரிந்து கொண்டால் யாருமே அதைப் புறக்கணித்து விட முடியாது என்பது நிஜம்.
பழைய சோற்றில் புரோபயோட்டிக்குகள் நிறைந்திருப்பதால் அது ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ரத்த வெள்ளை அணுக்களை, 'படை வீரர்கள்' என்று அழைக்கலாம். ஏனெனில், அவை தான் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்து போராடுகின்றன.எனவே அவை தான், நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம் என்று கூறலாம். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறையும் போது தான் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. ஆகவே பழைய சோற்றை சாப்பிடும் வழக்கம் இருப்பவர்களுக்கு கேன்சர் பாதிக்கக் கூடிய சாத்தியக் கூறு குறைவு என்கிறார்கள்.
பழைய சோறு சாப்பிடுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராது. இன்றும் பழையதுடன் இரண்டு சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் சிலருக்கு உண்டு. இவ்வாறு உண்பதால் வெங்காயத்தின் தன்மை ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, மாரடைப்பை தடுக்கிறது என்கிறார்கள்.
பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.இதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சினைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.அல்சர் பிரச்சினையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.
இத்தனை அருங்குணங்கள் கொண்ட பழைய சோற்றின் அருமையை நம்மை விட அமெரிக்கர்களும் பிற வெளிநாட்டவரும் தான் இந்தக்காலத்தில் அதிகமும் உணர்ந்திருக்கிறார்கள்.
ஏனெனில், இன்றைய தேதிக்கு வெளிநாட்டவர்களால் கூகுளில் அதிகமும் தேடப்படும் உணவு ரெசிப்பி எதுவென்றால் அது நம்மூர் பழைய சோறு தான்.
உண்மையில் அதை முறையாக தயாரிக்கத் தெரிந்த நாம் அதை புறக்கணிப்பது நியாயமா?!