மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றில் ஸ்பெயின்!

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இறுதிச்சுற்றில் ஸ்பெயின்!
Published on

களிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. ஸ்பெயின் அணியின் ஓல்கா கர்மோனா, கடைசி நேரத்தில் போட்ட கோல் ஸ்பெயினின் வெற்றிக்கு வழிவகுத்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஸ்பெயின் இறுதிச்சுற்றில் மோதும்.

ஆக்லாந்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் - ஸ்வீடன் இடையிலான ஆட்டம் பரபரப்பாகவே இருந்தது. இரு அணிகளும் ஒருவரை ஒருவர் கோல் போட முடியாமல் தற்காப்பு ஆட்டதைக் கடைபிடித்தனர். இந்த நிலையில், ஸ்பெயின் அணியில் பதிலி ஆட்டக்காரர் சல்மா பரல்லூலு ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரு கோல் போட்டார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஸ்வீடனின் ரெபக்கா ப்ளோக்விஸ்ட் ஒரு கோல் போட்டு சமன் செய்தார். உடனே ஸ்பெயின் அணியின் கேப்டன் கார்மோனா, அதிரடியாக பந்தைக் கடத்திவந்து கடைசி நிமிடத்தில் கோல் போட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் அருகே சீறிப்பாய்ந்து கோலானது.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை காலிறுதியைக்கூட எட்ட முடியாத நிலையில் இருந்த ஸ்பெயின் அணி, இந்த முறை இறுதிச்சுற்றுவரை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்று ஸ்பெயின் நினைத்திருக்கும் நிலையில், இதுவரை பங்கேற்ற நான்கு உலகக் கோப்பை போட்டிகளிலுல் மூன்றாவது முறையாக ஸ்வீடன் அரையிறுதியில் தோற்றுப்போயுள்ளது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயின் அணி சுறுசுறுப்புக் காட்டி ஆட்டத்தை தன்கையில் எடுத்துக் கொண்டு விளையாடியது. இந்த விஷயத்தில் ஸ்வீடன் அணி பின்தங்கியே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com