புதிய வைரஸ் தொற்று பரவல், சுய மருந்துகள் வேண்டாம் ICMR எச்சரிக்கை!

புதிய வைரஸ் தொற்று பரவல், சுய மருந்துகள் வேண்டாம் ICMR எச்சரிக்கை!

நாடு இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பிலிருந்தே இன்னமும் முழுமையாக விடுபட்டதாகத் தெரியவில்லை. இப்போதும், இங்கொன்றும் அங்கொன்றுமாக கோவிட் தொற்று நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் புதிய வகை வைரஸ் தொற்று ஒன்று பரவிக் கொண்டிருப் பதாகவும் அதற்கான சிகிச்சை முறையில் சுய சிகிச்சை முறையைப் பின்பற்றக் கூடாது என்றும் ICMR எச்சரித்துள்ளது. வாஸ்தவத்தில், இது ஹெல்த்கேர் சமூகத்தினரிடையே மிகுதியான எரிச்சலைக் கிளப்பிய மற்றுமொரு H3N2 தொற்று ஆகும், இதை எப்படி எதிர்கொள்வது என தற்போது ICMR ஒரு ஆலோசனை யையும் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வைரஸ் பாதிப்பானது தொடர்ச்சியாக இந்தியாவின் சில பகுதிகளில் பரவி வருகிறது.

மேற்கு வங்கத்தில் அடினோவைரஸால் ஏற்பட்டதாகக் கருதப்படும் குழந்தைகளின் இறப்புக்கள் ஏராளமாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றன, மருத்துவமனைகள் தோறும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பெற்றோருக்கு பதில் சொல்லும் நிலையில் இருக்கிறது மாநில அரசு.

கோவிட் தொற்றுநோய்களின் போது செயலற்ற நிலையில் இருந்த இந்த வைரஸ்களில் பெரும்பாலானவை பழிவாங்கும் மனப்பான்மையுடன் மீண்டும் திரும்பியதாகத் தோன்றுகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் H3N2 வைரஸ் எழுச்சியை கிழக்கு ஒதிஷா தான் முதலில் அறிவித்தது, ஏனெனில் இப்பகுதியில் குளிர்காலத்தில் பருவகால காய்ச்சல் உச்சத்தை அடைகிறது. H3N2 மெதுவாக ஆதிக்கம் செலுத்தி H1N1 வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கையை H3N2 வாக மாற்றியுள்ளது, இந்த தொற்றானது நோயாளிகளுக்கு நீடித்த சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. ICMR தரவுகளின்படி, H3N2 பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் ஆதரவும் 7% பேருக்கு தீவிர சிகிச்சையும் தேவைப்படுகிறது.

இதுவரையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அடினோ வைரஸ் எழுச்சியானது மேற்கு வங்கத்தில் மட்டுமே உள்ளதாகப் பதிவாகி உள்ளது, மேலும் மம்தா பானர்ஜி அரசாங்கம் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களும் போதுமான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், H3N2 இன் தொற்றுத்தன்மை மற்றும் அதனால் ஏற்படுகின்ற சிக்கல்களின் தொகுப்பைக் கருத்தில் கொண்டு, இந்த இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை வைரஸ் பாதிப்புக்கு போதுமான கவனம் செலுத்தப்பட வேண்டும் என ICMR எச்சரிக்கிறது.

H3N2 உடனான சவால்களில் ஒன்று, அரசுத் துறையில் உள்ள வரையறுக்கப்பட்ட சோதனை வசதிகள் ஆகும், அதே நேரத்தில் தனியார் நிறுவனங்களில், நோயைக் கண்டறியும் உரிமை தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைகளை நாடாமல் சுய மருத்துவத்தில் இறங்கி விடக்கூடிய அபாயம் கொரோனா காலத்திலேயே மிகுந்திருந்தது. அதையே இப்போதும் அவர்கள் செய்து விடக்கூடாதே எனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வைரஸ் தொற்றைக் கண்டறியும் வசதிகள் பரிந்துரைக்கப்படுவதை அரசு ஊக்குவிக்கிறது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் மருத்துவப் பயிற்சியாளர்கள் மட்டுமே தேவையான பரிசோதனைகளை அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் குறிப்பாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ஆண்டிபயோடிக்குகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என ICMR தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகள் இதற்கான கண்காணிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ICMR வலியுறுத்துகிறது.

இப்போதுதான் நாடு கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்டு சற்றே சுதந்திரமாக மூச்சு விடத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் மேலும் மேலுமென புதுப்புது வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையை இந்த உலகம் தாங்காது. எனவே புதுப் புது தொற்றுக்களால் பாதிப்பு நிகழும் போது பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் மருத்துவர்களின் போதிய வழிகாட்டுதலுடனும் மருந்துகளை எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்கிறது ICMR.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com