ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு கோப்பையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு கோப்பையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

லக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகம் ஒன்றில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரைத் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் வெளியேறிய நிலையில் வெண்கலப் பதக்கத்தை ஜப்பான் அணியுடன் பகிர்ந்து கொண்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் எகிப்து மற்றும் மலேசிய அணிகள் மோதின. முதலில் விளையாடிய எகிப்து வீராங்கனை கென்சி அய்மன் மலேசிய வீராங்கனை சின் யிங்யிடம் 3 - 1 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ, மலேசிய வீரர் டேரன் பிரகாசமுடன் அதிரடியாக விளையாடி 3 - 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து, மூன்றாவதாக விளையாடிய எகிப்தின் முன்னணி வீராங்கனை பைரோஸ், மலேசியாவின் ஐரா அஸ்மானுடன் விளையாடி 3 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவை 4 - 1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, எகிப்து அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து, உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியின் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கப் பதக்கங்களை வழங்க, முதல்வர் ஸ்டாலின் தங்கக் கோப்பையை வழங்கி கௌரவித்தார். மேலும், மலேசிய அணிக்கு வெள்ளிப் பதக்கங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க, வெள்ளிக் கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார். இதேபோன்று மூன்றாம் இடத்தைப் பிடித்த இந்தியா மற்றும் ஜப்பான் அணியினருக்கு வெண்கலப் பதக்கங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க, வெண்கல கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “விளையாட்டு வீரர்களின் கடமையும், திறமையும் பெரிது. ஸ்குவாஷ் உலகக் கோப்பையை தமிழ்நாட்டில் நடத்தத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் நமக்குக் கிடைத்த மிகப்பெரும் பெருமை. இதுபோன்று, உலகமே வியக்கும் அளவுக்கு நாம் போட்டிகளை நடத்தி காட்டியுள்ளோம்’ என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com