
உலக கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணியிடம் அவமானகரமான முறையில் இலங்கை அணி தோல்வி அடைந்த அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை நிதிநெருக்கிடியில் சிக்கி இருக்கும் நிலையில் பணக்கார அமைப்பான இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஊழல் விவகாரம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மோதல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணசிங்கவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட இந்த குழுவில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் வாரியத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலர் மோகன் டிசில்வா பதவியை ராஜிநாமா செய்த அடுத்த நாளில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களை பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க கோரியதாக கூறப்படுகிறது. உலக கோப்பை போட்டியில் இலங்கையின் தொடர் தோல்வியை அடுத்து வாரிய உறுப்பினர்கள் தார்மிக அடிப்படையில் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ரணசிங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இலங்கை அணி வீரர்கள் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. நிர்வாகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது, நிதிமுறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ரணசிங்க.
ஊழல்புகார்கள் குறித்து விசாரிக்க நியமித்த மூவர் கொண்ட குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்பந்தத்தின் பேரில் அமைச்சர் ரணதுங்க வாபஸ் பெற நேரிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ரணதுங்க கலைத்து உத்தரவிட்டுள்ளது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே மற்றொரு காபினெட் அமைச்சரான பிரசன்ன ரணதுங்க, 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.