கிரிக்கெட் போட்டியில் எதிர்த்து விளையாடும் இரண்டு அணிகள் வெற்றிக்காகவே போராடும். இருப்பினும் போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வார்கள். விளையாட்டு வேறு; நட்பு வேறு என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். போட்டி நடக்கும் வரை தான் போராட்டம். முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் சகஜமான நண்பர்களாகவே பேசிக் கொள்வார்கள். இதைப் பற்றித் தான் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலியும் சமீபத்தில் மனம் திறந்தார்.
ஐசிசி சார்பில் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. கோப்பையை வெல்ல அனைத்து வீரர்களின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. கிரிக்கெட்டில் ஐசிசி கோப்பைகளை வெல்வது தான் மிகச்சிறந்த தருணமாக பார்க்கப்படும். அவ்வகையில் இந்திய அணிக்கு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அற்புதமான தருணம் கிடைத்துள்ளது.
கிரிக்கெட்டில் ஓர் அணி வெற்றி பெற்றால், மற்றொரு அணி தோல்வி அடையத் தான் வேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. களத்தில் எந்த அணி சிறப்பாக செயலாற்றுகிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இருப்பினும் நாம் வெற்றி பெறும் பட்சத்தில், எதிரணியில் நம்முடைய நண்பர் இருந்தால், நிச்சயமாக வருத்தமும் ஏற்படும். ஏனெனில் நட்புக்கு வெற்றி தோல்வி பற்றி தெரியாதல்லவா!
இந்தியாவின் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்டாலும், மற்ற நாட்டு வீரர்களுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டக் கூடியவர். நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், கோலியின் நண்பர். விராட் கோலி அங்கம் வகித்த இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை சொந்தமாக்கிக் கொள்ளும் போது, எதிரணியில் இருந்தவர் கேன் வில்லியம்சன்.
இதுகுறித்து கூறிய கோலி, “என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் கேன் வில்லியம்சன். இவர் தோல்வி பெற்ற அணியில் இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் நான் இரண்டு முறை தோல்வி பெற்ற அணியில் இருந்து போது, அவர் வெற்றி பெற்ற அணியில் அங்கம் வகித்தார். விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணமானது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பு தான் மிகவும் பெரியது” என கூறினார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணியை விராட் கோலியும், நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்சனும் கேப்டனாக வழிநடத்தினார்கள். இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற போது விராட் கோலி தோல்வியின் பிடியில் சிக்கித் தவித்தார். இதைத் தான் தற்போது நினைவு கூர்ந்து, தனது நண்பர் தோல்வியில் இருப்பதால் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்ப்பதால் தான், பலரும் சக நாட்டு வீரர்களுடன் நட்புடன் பழகுகின்றனர். கிரிக்கெட்டில் இதுபோன்ற போக்கு நன்மையையே விளைவிக்கும்.