இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே டி20 சீரீஸ் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் மூன்று வேக பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணியை எதிர்ககொண்டது. இதன் பலனாக, ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா, நான்கு முக்கிய விக்கெட்டையும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டி குறித்து ஹார்திக் பாண்டியா குறிப்பிடுகையில், நாங்கள் நல்ல ஸ்கோர் செய்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டம் எங்கள் அணி 191 ரன்களை எடுக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல், சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் வெறித்தனமாக இருந்தது.
இப்போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், முதல் 32 பந்துகளை சந்தித்து அதில் அரை சதம் கண்டார். அதன்பின் அவரது ஆட்டம் சூடுபிடிக்கவே, அடுத்த 17 பந்துகளில் சதம் அடித்து அணியின் ஸ்கோரை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். இப்போட்டியில் 51 பந்துகளை சந்தித்து 111 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை பலமாக உயர்த்தினார்.
சூர்யகுமாரின் இந்த அதிரடி ஆட்டம் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததோடு, பந்துவீச்சாளர்களும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர் என்று ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.
இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், கடைசி ஆட்டத்தில் எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தனக்கு தெரியாது என்று கூறியநிலையில், வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை ஹார்திக் பாண்டியா தன்னுடைய கருத்தாக பதிவு செய்துள்ளார்.