
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 போட்டித் தொடர் வரும் 23 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு தலைமையேற்பது யார் தெரியுமா? சூர்யகுமார் யாதவ்தான் இந்திய அணிக்கு தலைமையேற்கிறார். (ரோகித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.)
சமீபகாலங்களில் இந்தியாவின் டி-20 அணிக்கு தலைமையேற்று வழிநடத்தியவர் ஹார்திக் பாண்டிய. காலில் எலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை போட்டியில் இவரால் விளையாட முடியவில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் மும்பை வீரரான சூர்யகுமார் யாதவிடம் டி-20 அணித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டி-20 போட்டிகளில் சர்வதேச அளவில் நெ.1 பேட்ஸ்மெனாக கருதப்படுபவர் சூரியகுமார்.
இதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் அயர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக பங்கேற்ற ரிங்கு சிங்குவும் அணியில் சேர்க்க்ப்பட்டுள்ளார். திலக் வர்மா, யாஷாவ்ஸி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும்கூட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலக கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், டி-20 போட்டித் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார். கடைசி இரண்டு போட்டிகளுக்கு அவர் துணை கேப்டனாக இருப்பார். முதல் இரண்டு போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வேட் துணைக்காப்டனாக இருப்பார்.
அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவு மற்றும் அமெரிக்காவில் டி-20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு இந்திய அணியை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் இருக்கும் என கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி வரும் வியாழக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதன் பின் திருவனந்தபுரம் (நவம்பர் 26), குவாஹாட்டி (நவம்பர் 28), நாக்பூர் (டிசம்பர் 1) மற்றும் ஹைதராபாதில் (டிசம்பர் 3) போட்டிகள் நடைபெறும்.
இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வேட் (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், சிவம் துபே, ரவி விஷ்ணோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், (ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்பார்).