ஒன்பதாவது புரோ கபடி லீக் போட்டிகள் நடந்து முடிந்து, நேற்று இரண்டு பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் எலிமினேஷன் போட்டியில் தபாங் டெல்லி அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. அதில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து, இந்தியாவே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த தமிழ் தலைவாஸ் அணியும் யுபி யோத்தாஸ் அணியும் மோதின. ஏற்கெனவே, தமிழ் தலைவாஸ் அணி, யுபி யோத்தாஸ் அணியை வெற்றி பெற்றுதான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனால் இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியை வென்று அரையிறுதிக்குச் செல்ல யுபி யோத்தாஸ் அணி மும்முரமாக களமிறங்கியது. முந்தைய போட்டியில் இடம் பெறாத நட்சத்திர வீரர் பர்தீப் நர்வால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டது அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதி ஆட்டம் வரை முன்னிலையிலேயே இருந்து வந்தது. வழக்கம் போல் நரேந்தர் ஆட்டமும் அஜின்கியோ பவார் ஆட்டமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அடுத்த பாதி ஆட்டத்தில் தங்களது முழு பலத்தையும் காட்டிய யுபி யோத்தாஸ் அணி வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணிக்கு சரியான நெருக்கடியை கொடுத்தார்கள். குறிப்பாக, எதிர்பார்த்தபடி பர்தீப் நர்வால் ஆட்டம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் ஆட்ட நேர இறுதி நிமிடத்தில் பர்தீப் நர்வால் எடுத்த நான்கு புள்ளிகளால் தமிழ் தலைவாஸ் அணி மிகவும் நெருக்கடிக்கு உள்ளானது.
ஆட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகளும் சரியாக 36க்கு 36 என சமப் புள்ளிகள் பெற்றதால் டை பிரேக் நிலை உருவானது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஐந்து ரெய்டுகள் கொடுக்கப்பட்டன. இதில், தமிழ் தலைவாஸ் அணி 4 புள்ளிகளையும் உ.பி யோத்தாஸ் அணி 3 புள்ளிகளையும் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கெனவே ஜெய்ப்பூர் பிங்க் பேந்தார்ஸ் அணியும் புனேரி பால்டன் அணியும் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ஆகையால் பிளே ஆப் சுற்றில் தகுதி பெற்றுள்ள பெங்களூரு புல்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தார்ஸ் அணியுடன் வரும் வியாழக்கிழமை 7.30 மணிக்கும், தமிழ் தலைவாஸ் அணி புனேரி பால்டன் அணியுடன் 8.30 மணிக்கும் அரையிறுதி சுற்றில் சந்திக்க உள்ளன. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் வரும் சனிக்கிழமை 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன. இது வரை லீக் போட்டிகளிலேயே விலகி வந்த தமிழ் தலைவாஸ் அணி, இம்முறை வெற்றிக் கோப்பையை தொட்டுப் பார்க்குமா என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்திருக்கிறது.