பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றுகள் மற்றும் சூப்பர் 16 சுற்றுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மொராக்கோவுக்கு எதிரான காலியுறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்தது.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரிலிருந்து போர்ச்சுகல் வெளியேறியதை ஜீரணிக்க முடியாமல் அந்த அணியின் கேப்டன் ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதார். இதனை கண்ட அந்நாட்டு ரசிகர்களும் கண் கலங்கினர்.
இந்நிலையில் போர்ச்சுகல் அணி தோற்றதற்கு அதன் பயிற்சியாளர், பெர்னாண்டோ சாண்டோஸ் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்த போட்டியில் ரொனால்டோவை பாதியில் வெளியேற்றினார். தொடர்ந்து சுவிட்சர்லாந்து, மொரோக்கோவுக்கு எதிரான போட்டிகளிலும் ரொனால்டோவை பாதியில் களமிறக்கியதை விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இத்தோல்வி குறித்து ரொனால்டோ தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "போர்ச்சுகலுக்காக உலகக் கோப்பையை வெல்வதுதான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம்.. அதை பலமுறை நனவாக்கியிருக்கிறேன்.
16 வருடங்களில் உலகக் கோப்பைகளில் நான் விளையாடிய 5 தொடர்களில், பல கோல்களை அடித்து இருக்கிறேன். ஆனால், நேற்று எனது கனவு சோகத்தோடு முடிவடைந்தது. ஆனால், போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு என்பது ஒரு கணம் கூட மாறவே இல்லை என்பதை உங்களிடம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
நான் எப்போதும் அனைத்து வீரர்களின் கோல்களுக்காகவும் போராடுபவனாகவே இருந்தேன்.இப்போதைக்கு அதிகம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. நன்றி போர்ச்சுகல்".
-இவ்வாறு ரொனால்டோ தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.