

நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய நிலையில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக ஷார்துல் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற பெங்களூர் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.
ஐபிஎல்-லில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி, இந்த முறை முதல் போட்டியிலேயே பஞ்சாப்பிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்றைய போட்டியில் அணி வீரர்கள் அதிரடியை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி சார்பாக குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் இருவரும் களமிறங்கினர்.
இந்த எதிர்பார்ப்பை குர்பாஸ், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர் பூர்த்தி செய்தனர். மற்ற வீரர்களில் சிலர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக, மந்தீப் சிங், ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேன் மூவரும் டக் அவுட் ஆகினர்.
இந்நிலையில், அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 57, ரிங்கு சிங் 46, ஷர்துல் தாக்கூர் 68 ரன்களை எடுக்க கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தனர்.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூர் அணி சார்பாக விராட் கோலி, ஃபாப் டூ ப்ளசிஸ் இருவரும் களத்தில் இறங்கினர். துவக்க வீரர்கள் அடித்து விளையாட நினைத்தும் கொல்கத்தா அணி பவுலர்களின் பந்துவீச்சில் பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது.
இதனால் பெங்களூர் அணி 17.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ஷார்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்ததோடு, 2 ஓவரில் 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றிய நிலையில், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.