கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஊழல், பாகுபாடு, வன்முறை, வாக்கு வங்கி அரசியல் ஆகியவை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற நிலையில், அதை அரசியலுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவற்றுக்கு ‘சிவப்பு அட்டை’ கொடுக்கப் பட்டுவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 2 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டுவந்துள்ள நிலையில் இப்போது 7 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.
முன்பு வடகிழக்கு பிராந்தியத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. இப்போது அவை நீக்கப்பட்டுவிட்டன. பல்வேறு அமைதி ஒப்பந்தங்களும், மாநிலங்களுக்கு இடையிலான எல்லை ஒப்பந்தங்களும் கையெழுத்திடப் பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலத்தில் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்தும் மேம்பட்டுள்ளது. நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டி போல் இந்தியாவிலும் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்றார். ஷில்லாங்கில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் வடகிழக்கு கவுன்சில் பொன்விழாக் கூட்டத்திலும் பங்கேற்றார். திரிபுராவிலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.