உடல் புத்துணர்ச்சிக்கு உதவும் திருநீற்று பச்சிலை!

உடல் புத்துணர்ச்சிக்கு உதவும் திருநீற்று பச்சிலை!
Published on

பொதுவாக எல்லாச் செடிகளிலும் பூக்கள் மட்டுமே நல்ல நறுமணத்துடன் இருக்கும். ஆனால் கற்பூரவள்ளி, ஓமவள்ளி, யூகலிப்டஸ் போன்ற செடிகளின் இலைகள் நல்ல வாசனையாக இருக்கும். அதேபோல மிகுந்த நறுமணத்துடன் இருக்கும் மற்றொரு செடிதான் திருநீற்றுப் பச்சிலை செடி. இதன் ஒரு இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் கூட அவ்வளவு வாசனையாக இருக்கும். தலைவலிக்கு மிகச்சிறந்த நிவாரணி இந்த இலை. நான்கே இலைகளை கசக்கி முகர்ந்து பார்த்தால் தலைவலி நீங்கிவிடும்.

திருநீற்றுப்பச்சிலை இலைகள் நம் உடலை இயற்கையிலேயே நறுமணம் வீச செய்யும் குணம் மிக்கவை. வெயில் காலத்தில் என்ன தான் சோப்பு போட்டுக் குளித்தாலும், சில மணிநேரங்களில், உடலில் வியர்வை நாற்றம் அடிக்கும். ஒரு கைப்பிடி திருநீற்றுப்பச்சிலை இலைகளைப் பறித்து ஒரு பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்குள் இலைகளின் நறுமணம் அந்த தண்ணீரில் கலந்து விடும். அந்த தண்ணீரில் குளித்தால் நாள் முழுவதும் உடல் நறுமணத்துடன் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அது மட்டுமல்ல, இந்த இலைகள் பயன்கள் நிறைய. காது வலியால் அவதிப்படுபவருக்கு இந்த இலையின் சாற்றை சில சொட்டுகள் விட்டால் காது வலி நீங்கிவிடும். வாயுத்தொல்லை இருப்பவர்கள் இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்சனை சரியாகும். இந்த இலையின் சாறு முகப்பருவையும் தேமல், படை முதலியவற்றை குணமாக்கும்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பத்து திருநீற்றுப்பச்சிலை இலைகளை மென்று தின்று வந்தால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய கடுமையான வலியை குறைக்கும்.

இந்தச் செடியின் விதைகளை சப்ஜா விதைகள் என்பார்கள். அரை ஸ்பூன் விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல் போன்ற நோய்கள் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலை செடியை அனைவரும் வீட்டில் வளர்க்கலாம். அபார்ட்மெண்ட் பால்கனியில் வைக்க ஏற்றது. இதன் விதைகளை உருவி தொட்டிச் செடியில் தூவி விட்டால், சில நாட்களிலேயே முளைத்துவிடும். என் வீட்டு பால்கனியில் ஒரு செடி வைத்து வளர்த்து வருகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com