
இன்றைய காலகட்டத்தில், குணிந்து நிமிர்ந்து கொஞ்சம் வேலை செய்தாலே நம்முடைய உடம்பு மிகவும் சோர்வடைந்து விடுகிறது. அதற்கான காரணம், நாம் சாப்பிடும் உணவு முறைதான். வெறும் சாதம், இட்லி, தோசையிலும் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து முழுதாகக் கிடைப்பது இல்லை. ஆகவே, நம் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், மாற்றிக்கொள்ள உளுந்தங்கஞ்சி குடிப்பது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – ½ கிலோ, பனை வெல்லம் – ¾ கிலோ, சுக்கு – விரலளவு, நல்லெண்ணெய் – 2 கப், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: உளுத்தம் பருப்பைக் கழுவிக் களைந்து அரை மணி நேரம் நீரில் ஊறிய பின்னர் நைசாக, திரளத் திரள அரைத்தெடுத்து சிறிதளவு உப்பு சுவைக்காகச் சேர்த்து தண்ணீர் விட்டு சற்று நீர்க்கக் கரைத்துக்கொள்ள வேண்டும். மாவுக் கலைவயின் அளவில் பாதியளவு தண்ணீரை அடி கனமான மாவுக் கலவையின் அளவைப் போல இரு மடங்கு கொள்ளளவு உள்ள உறுதியான வெண்கலம் அல்லது ஈயம் உள்ளுக்குள் பூசிய பித்தளைப் பாத்திரம் எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
சுக்கைத் தட்டிப் பொடியாக்கிக் கொள்ளவும். பனைவெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் நீரில் கொட்டிக் கரைத்து சுத்தமாக வடிகட்டி வைத்துக்கொள்ளவும். நீர் நன்கு கொதிக்கும்போது கரைத்து வைத்துள்ள மாவுக் கலவையைக் கரண்டியால் நன்றாகக் கலக்கிவிட்டு கொதிக்கும் நீரில் ஊற்றி அடிபிடிக்காமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். மாவுக் கலவை பொங்கி வரும்போது தீயை நிதானமாக்கிவிட்டு கலவை வெந்து திரளும்வரை சிறிது நேரம் விட்டு விட்டுக் கிண்ட வேண்டும். கலவை கலந்து திரளும்போது வெல்லம் நீரை கலக்கிவிட்டு ஊற்றி நன்றாகக் கிண்ட வேண்டும்.
வெல்ல நீர் மாவுக் கலவையோடு சேர்த்து நீர்க்க இல்லாமல் சற்றுத் தடித்து வரும்போது சுக்குத் தூளைப் போட்டுக் கிளறி இறக்கி விட வேண்டும்.
இதைச் சற்றுச் சூடாகவே கிண்ணங்களில் ஊற்றி ஒரு கரண்டி நல்லெண்ணெயையும் ஊற்றிக் கலக்கிக் குடிக்க வேண்டும். இது நெஞ்சு சளி, நெஞ்சு வலி இருமல் போன்றவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகும்.
உளுத்தம் மாவு
தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு – ½ கிலோ, பச்சரிசி – 200 கிராம் நல்ல வெல்லம் (அ) பனைவெல்லம் – ½ கிலோ, நெய் (அ) நல்லெண்ணெய் – 1 கப், முட்டை – 8, முந்திரி – 100 கிராம்.
செய்முறை: உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து வைத்துக்கொள்வும். பச்சரிசியை நீரில் ஊறவைத்து ஊறிய பின்னர் நீரை சுத்தமாக வடித்துவிட்டு வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரியாக வறுத்தெடுக்கவும். இரண்டையும் நைசாக மாவாக்கிக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு லேசாகக் காய்ந்ததும் வெல்லத்தைக் கொட்டிக் கிளறவும். வெல்லம் இளகி வரும்போது தீயை நிதானமாக்கி உளுந்து + பச்சரிசி மாவைத் தூவித் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும். அடிபிடிப்பது போல் இறுகினால் சிறிதளவு நெய் விட்டுக் கொள்ளவும். மாவு முழுவதையும் தூவிக் கிளறிய பின்பு முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும். எல்லாமாகச் சேர்த்து கரகரப்பான தூளாக உதிரும்போது நெய்யில் வறுத்து சீவிய முந்திரியைத் தூவிக் கிளறி இறக்கிவிடவும். ஆறிய பின்னர் இறுக்கமான டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளலாம். கெடவே கெடாது.
இதை நல்லெண்ணெயில் தயார் செய்து பூப்பெய்தும் பெண்களுக்கு ஒரு கிண்ணம் (இரு வேளைகள்) கொடுத்து வந்தால் இடுப்பு வலி தெரியாததோடு இடுப்பு வலிமை பெறும். வயிற்றில் உள்ள கசடுகள் தடையின்றி வெளியேறும். உடம்பும் தெம்பு பெறும்.