டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கி, நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸை வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலனும், டேவன் கான்வேவும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை சாஹீன் அஃப்ரிடி வீச வந்தார்.
அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன், அதிரடியாக ஆட நினைத்தாலும், துரதிருஷ்டவசமாக அதே ஓவரின் 3வது பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் அவுட் ஆனார்.
மிதமாக ஆடிவந்த டேவன் கான்வேவும் 21 ரன்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து க்ளென் பிலிப்ஸ் சொற்ப ரன்களில் அவுட்டாக 7.6 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் கேன் வில்லியம்சனுடன் டேரில் மிட்ச்சல் கைகோர்த்தார். இருவரும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தியதால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி பேட்டிங்கை நிறைவு செய்ததையடுத்து, வெற்றி முனைப்புடன் பாகிஸ்தான் அணி தற்போது களத்தில் விளையாடி வருகிறது.