
ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட். இவர் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 100 மீ, 200மீ, 100மீ தொடர் ஓட்டம் என மூன்று உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
இந்த நிலையில், இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் செப்டம்பர் மாதம் டெல்லி மற்றும் மும்பைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் அதாவது 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது, மீண்டும் இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன், உற்சாகத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியாவில் தனக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளதாகவும், இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
உசைன் போல்ட் இந்தியா வர இருப்பது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்கு வந்திருந்த உசேன் போல்ட் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் இணைந்து கிரிக்கெட் மற்றும் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
உசேன் போல்ட் இந்தியா வரும்போது அவரது முன்னிலையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நேஷனல் ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் வீரர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடவும் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
2017-ல் போட்டி தடகளத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் இன்னும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு ஆளுமைகளில் ஒருவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.