கனவு நனவானது! இந்திய அணியில் இணையும் 15 வயது அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷி

15 வயதில் சாதனை படைக்கத் தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி. அவரது கிரிக்கெட் பயணத்தின் முக்கியத் தருணங்கள் மற்றும் சாதனைகள்
Vaibhav Suryavanshi surprised to get indian team jersey
Vaibhav Suryavanshi surprised BCCI
Updated on

இந்திய கிரிக்கெட் உலகின் அதிக எதிர்பார்ப்பு மிக்க ஒரு தருணமாக, வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச போட்டியின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக இப்போதே அவர் பார்க்கப்படுகிறார். அவரும் தனது சர்வதேச அறிமுக போட்டியை எண்ணி மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 26 அன்று அயர்லாந்தில் நடைபெற உள்ள , அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வைபவ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. இந்தியர்கள் மட்டுமல்ல வைபவ்வின் ஆட்டத்தினை காண பல நாட்டு முன்னாள் வீரர்களும், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அயர்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகி கிரீம் வெஸ்ட் "வைபவின் வருகை அயர்லாந்தில் உள்ள ரசிகர்களிடையே ஏற்கெனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் , டிக்கெட் விற்பனையும் அமோகமாக உள்ளது. மீதமுள்ளடிக்கெட்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் த்ரோடவுன் நிபுணர் ரகு, நேற்று வைபவ் சூர்யவன்ஷி தங்கியுள்ள விடுதி அறைக்கு சென்று, இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியை அவருக்கு வழங்கினார். அந்த ஜெர்சியை பெற்றுக் கொள்ளும் முன்னர் வைபவ் , ரகுவின் காலை தொட்டு கும்பிட்டு மிகுந்த மரியாதை உடன் அந்த ஜெர்சியை கையில் வாங்கினார். வைபவ் ஒரு ஆக்ரோஷமிக்க விளையாட்டு வீரர் மட்டுமல்ல , பெரியோர்களை மிகுந்த மரியாதையுடன் அணுகும் உயரிய பண்பினை கொண்டவர்

இலங்கை அணியுடன் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் , மற்றொரு தருணத்தில் இலங்கை அணியின் முதல் கேப்டனான அனுராவின் கால்களை தொட்டு கும்பிட்டு, தனது மதிப்பு மிகுந்த கலாச்சாரத்தை அண்டை நாட்டிற்கும் காட்டினார். அவரின் இந்த மரியாதையான அணுகுமுறையை பார்த்த இலங்கை அணியின் சில முன்னாள் வீரர்கள், வைபவிற்கு ஆதரவாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக எதிர்பார்ப்புடன் தனது ஜெர்சியை கையில் ஏந்திய வைபவ் மிகவும் நெகிழ்ந்து போனார். இந்த ஒரு தருணம் எந்த ஒரு விளையாட்டு வீரனுக்கும் மிகவும் முக்கியமான வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாகும். இது வைபவின் கடினமான உழைப்பு , அவரது தந்தையின் நீண்டகால லட்சியம் , தியாகம் ஆகியவற்றை கடந்து இந்த பெரிய வாய்ப்பினை அவர் பெறுகிறார்.

Vaibhav Suryavanshi about jersey
Vaibhav Suryavanshi BCCI

அப்போது பேசிய வைபவ் "கிரிக்கெட் மைதானத்தில் நான் முதல்முறை மட்டையை ஏந்தியபோது கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த நீல நிற ஜெர்சியைப் பார்த்ததும் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கனவில் மிதப்பது போல உள்ளது," என்று அந்த 15 வயது சிறுவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

​சாதாரணமாக இந்த இடத்திற்கு வைபவ் வரவில்லை. முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை ஏ அணியுடனான இறுதிப் போட்டியில் 11 பந்துகளில் அரை சதம் அடித்து உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருந்தார். இலங்கையில் நடந்த ஒரு சில கசப்பான விஷயங்கள் அவரின் தேசிய அணி நுழைவிற்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்று ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர். ஆனாலும் , அவற்றை எல்லாம் கடந்து இந்த சிறுவன் சாதித்துள்ளான்.

சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில், விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகிய சாதனையாளர்களைப் பின் தள்ளி 776 ரன்களை குவித்து 'ஆரஞ்சு தொப்பி'யை பெற்றார். தொடர்ச்சியான வைபவின் அதிரடியான ஆட்டத்தைக் கண்ட இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், "இவரைத் தவிர்க்கவே முடியாது" என்பதை ஒப்புக்கொண்டார். வரும் ஜூன் 26 ஆம் தேதி வைபவ் களமிறங்கும் பட்சத்தில் , சச்சினின் சாதனை தகர்த்து இந்திய அணிக்காக விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

logo
Kalki Online
kalkionline.com