அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்கள் கீரையை எளிதாகப் பயிரிட்டு வீட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
முதல் வேலையாக 1 அடி அகலமுள்ள ஆழம் அதிகமற்ற மண்தொட்டிகள் ஏழு வாங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, சில ஓட்டுச் சில்லுகள் அல்லது உடைந்த கற்கள் சிலவற்றை அடியில் போட வேண்டும். காற்றோட்டம் இருப்பதற்காக இது அவசியம்.
மூன்றாவதாக மணல், செம்மண் இரண்டையும் வாங்கிச் சமமாகக் கலந்து, எல்லாத் தொட்டிகளையும் முக்கால் அளவிற்கும், சிறிது மேலாக நிரப்ப வேண்டும்.
இத் தொட்டிகளில் தண்ணீரைத் தெளித்து (கொட கொடவென்று கொட்டக் கூடாது) தயார் நிலையில் வைக்கவும். கார்ப்பரேஷன் தண்ணீரைத் தவிர்ப்பது நல்லது.
இவைகளையெல்லாம் செய்து முடித்து கீழ்க்கண்ட செய்முறைகளைக் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
முதல் நாள்:
முதல் தொட்டியிலுள்ள மண்ணை நன்றாகக் கிளறிவிட்டு தனியா (கொத்துமல்லி விதை) விதைகளைத் தூவி மண்ணால் இலேசாக மூட வேண்டும்.
இரண்டாம் நாள்:
அடுத்த தொட்டியில் வெந்தய விதைகளை மேற்கண்ட முறையில் விதைக்க வேண்டும்.
மூன்றாம் நாள்:
பசலைக் கீரை ஒரு கட்டு வாங்கிக் கீரையைச் சமைத்துவிட்டு காம்புகளை மட்டும் அடுத்த தொட்டியில் நட வேண்டும்.
நான்காம் நாள் முதல் ஏழாம் நாள் வரை மீதமுள்ள தொட்டிகளில் மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை, புதினா கீரை, புளித்த கீரை, வல்லாரைக் கீரை (இவைகளையும் சமைத்து விட்டு) காம்புகளை மட்டும் நடவும்.
எட்டாம் நாள் முதல் தினம் ஒரு கீரை சமையலுக்குத் தயார். மூன்று பேர்கள் உள்ள குடும்பத்திற்குப் போதுமான கீரை ஒவ்வொரு தோட்டியிலும் கிடைக்கும். இதில் கொத்துமல்லி, வெந்தயம் இவற்றை மட்டும்தான் ஒவ்வொரு முறையும் புதிதாக விதைக்க வேண்டும்.
மற்ற கீரைகளில் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் அவைகள் துளிர்த்துவிடும்.
இதே முறையில் பொன்னாங்கண்ணி, பிரண்டை ஏன் முருங்கைக் கீரையைக்கூட வளர்த்து நாம் எடுத்துக் கொள்ளலாம்.
தண்ணீரை மட்டும் அளவோடு தெளித்தல் வேண்டும். இல்லாவிட்டால் தொட்டியில் உள்ள மண் கீழே இறங்கி தரையை அழுக்காக்கி விடும். மண்ணும் குறைந்துவிடும். இரு மாதங்களுக்கு ஒருமுறை எல்லாத் தொட்டிகளில் உள்ள கீரையையும் எடுத்துவிட்டு மண்ணை நன்றாகக் கிளற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மண்ணை மாற்ற வேண்டும்.
குழந்தைகள் கீரையைப் பறிப்பதிலும் விதைப்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள். இது அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. செடிகளிடம் அவர்கள் பரிவு காட்டவும் உதவும்.
புதிதாகப் பறித்த கீரைகளில் சத்து அதிகம் சுவையும் அதிகம். சில சமயங்களில் மார்க்கெட்டில் கிடைப்பது போல் கட்டு கட்டாகக் கிடைக்காவிட்டாலும், தினம் சிறிதளவு வெவ்வேறு கீரைகளைச் சமைப்பதால் எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.