பிரபல நட்சத்திர ஆட்டக்கார்ரான விராட் கோலி, 7 வெவ்வேறு ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் 2,000 ரன்கள் குவித்து உச்சம் தொட்ட வீர்ர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீர்ர் டீன் எல்கர் அதிரடியாக ஆடி 185 ரன்கள் குவித்தார். இந்தியா படுதோல்வி அடைந்த முதல் டெஸ்ட் மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ககிஸோ ரபாடா, மார்கோ ஜான்சென் மற்றும் நாந்ரே பர்கர் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க இந்திய பேட்ஸ்மென்கள் திணறிய போதிலும் விராட் கோலி மட்டும் ஓரளவு நின்று ஆடி. வேகமான சிங்கிள்ஸ், பவுண்டரிகள் என இரண்டாவது இன்னிங்ஸில் 76 ரன்கள் குவித்தார்.
முதல் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்களில் தோல்வி அடைந்தாலும் விராட் கோலி 82 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் மொத்தம் 2,006 ரன்களை குவித்துள்ளார்.
இதற்கு முன் 2012 இல் 2186 ரன்கள், 2014 ஆம் ஆண்டில் 2286 ரன்கள், 2016 இல் 2,595 ரன்கள், 2017 இல் 2,818 ரன்கள், 2018 இல் 2,735 ரன்கள், 2019 இல் 2,455 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் வேறு எந்த வீர்ரும் செய்யாத சாதனையாகும் இது.
இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரபாடாவின் பந்துவீச்சில் அவுட்டானார். வலது கை ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித், 8 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் அவுட்டானார். இதுவரை 11 இன்னிங்ஸில் 7 முறை அவர், ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
ஜெய்ஸ்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் பர்கள் வீசிய பந்தை அடிக்கப் போய் விக்கெட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
சுப்மன் கில், ஓரளவு நிதானமாக ஆடினாலும் 26 ரகன்கள் எடுத்திருந்த நிலையில் ஜான்சென் வீசிய பந்தில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 6, கே.எல்.ராகுல் 4 ரன்களிலும் வெளியேறினர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியதை அடுத்து இந்தியாவின் ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.
ஜஸ்ப்ரீத் பும்ரா ரன் அவுட்டானார். முகமது சிராஜ் 4 ரன்களில் பர்கர் பந்தில் வெளியேறினார். பிரசித் கிருஷ்ணா தடுமாறிய நிலையில், ஜான்சன் கோஹ்லியை வெளியேற்றியதை அடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.