விராட் கோலி இன்று நடக்கும் ரஞ்சி போட்டியில் விளையாடவுள்ளார். மூன்று நாட்களாக பயிற்சி செய்து வரும் விராட் கோலியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனால் பெரிய சிக்கல் ஏற்பட்டது.
ரஞ்சி கோப்பை தொடரின் (Ranji Trophy 2025) இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இந்திய வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் கலந்துக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். அதுவும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
அது யாராக இருந்தாலும் சரி என்று பிசிசிஐ திட்டவட்டமாக பேசியிருக்கிறது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வில்லை என்றாலும், வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியதாக தெரியவந்துள்ளது.
இப்படியான நிலையில், விராட் கோலி கடந்த 23ம் தேதி நடைபெற்ற சௌராஷ்டிரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய விளையாட்டில் கலந்துக்கொள்ளவில்லை. முன்னதாக பங்கேற்கிறேன் என்று கூறியதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் கழுத்தில் சுளுக்கு என்று கூறி விலகியதாகவும் சொல்லப்பட்டது.
இப்படியான நிலையில், இன்று நடைபெறவிருக்கும் டெல்லி மற்றும் ரெயில்வேஸ் இடையேயான ரஞ்சி போட்டியில் விராட் கோலி கலந்துக்கொள்ளவுள்ளார். இதன்மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி ரஞ்சி ட்ராபியில் கலந்துக்கொள்கிறார். இதனால் டெல்லி ரசிகர்களுக்கு இது மிகவும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக விராட் கோலி அங்கு பயிற்சி செய்த நிலையில் அவரை பார்ப்பதற்கு ஊடகத்தினர் மற்றும் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வந்ததாக கூறப்படுகிறது. விராட் கோலி பயிற்சி செய்வதால் அருண் ஜெட்லி மைதானத்தின் நிர்வாகிகள் காவல் துறையினரின் உதவியை நாடி இருந்தனர்.
பயிற்சிக்கே இந்த அளவுக்கு கூட்டம் கூடி இருக்கும் நிலையில், விராட் கோலி ஆடும் ரஞ்சி போட்டியை காண்பதற்கு சுமார் 10,000 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிசிசிஐ தற்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதாவது கூட்டத்தை குறைக்க டிவியில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் டெல்லி மற்றும் ரெயில்வேஸ் இடையே நடைபெற்ற போட்டிக்கு ஒளிபரப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.