இந்த இந்திய அணியை வைத்துக்கொண்டு T20 கப் வெல்ல முடியாது! – ஸ்ரீகாந்த் ஓபன் டாக்!
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு, கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இந்திய தேர்வுக்குழுத் தலைவர் மற்றும் பேட்ஸ்மேனான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் முடிவுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த அணி ஆசிய கோப்பையை வென்றாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், "இந்த அணியை வைத்துக்கொண்டு உலகக்கோப்பைக்குச் செல்லப் போகிறீர்களா? வெறும் ஆறு மாதங்களில் உலகக்கோப்பை வரவிருக்கிறது. அதற்கான தயாரிப்பு இதுதானா? தேர்வாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்," என்று சாடினார்.
ரிங்கு சிங், சிவம் துபே மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் தேர்வு குறித்து ஸ்ரீகாந்த் அதிருப்தி தெரிவித்தார். ஐபிஎல் 2023-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங், மற்றும் ஐபிஎல் 2024-ல் சிறப்பாக ஆடிய துபே, ஹர்ஷித் ராணா ஆகிய மூவரும் 2025 ஐபிஎல் சீசனில் ஃபார்மில் இல்லை. "ஐபிஎல் தொடர்தான் அணித் தேர்வுக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. ஆனால், தேர்வாளர்கள் அதற்கு முந்தைய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டதாகத் தெரிகிறது. ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் எப்படி அணிக்குள் வந்தார்கள் என்றே எனக்குப் புரியவில்லை," என்றார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 கிரிக்கெட் விளையாடாத சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டு, அவருக்குத் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதையும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அக்சர் படேல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள பலவீனம் குறித்தும் ஸ்ரீகாந்த் கவலை தெரிவித்தார். "ஐந்தாவது இடத்தில் யார் பேட்டிங் செய்வார்கள்? அந்த இடத்தில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, சிவம் துபே அல்லது ரிங்கு சிங் ஆகியோரில் ஒருவர்தான் ஆட வேண்டும்.
பொதுவாக ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் ஆடுவார். இப்போது அக்சர் படேலால் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியாது. சிவம் துபேவை எப்படித் தேர்வு செய்தார்கள் என்பது எனக்குப் புரியவில்லை," என்று அவர் கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது குறித்தும் ஸ்ரீகாந்த் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
இந்தியா தனது ஆசிய கோப்பை பயணத்தை செப்டம்பர் 10 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது.