சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தில் இந்தியாவிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தில் இந்தியாவிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

ந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக  ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்நாட்டில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில், முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை வெற்றி கொண்டது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0  என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்று இருந்தது. அதுமட்டுமின்றி, அடுத்த மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி விடலாம் என்ற பெரிய எதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வெஸ்ட் இண்டீஸின் கயாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில் டாஸ் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார். இதேபோல் அந்த அணியின் சார்பில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், ஷுப்மன் கில் 6 ரன்களிலும் அவுட்டாகி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தனர். ஒருகட்டத்தில் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவும், இந்திய அணிக்கு புது வரவான திலக் வர்மாவும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு எடுத்தனர்.

ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த சூர்யகுமார் யாதவ் தனக்கு வீசிய பந்துகள் அனைத்தையும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக வெளுத்து வாங்கினார். இவர் 44 பந்துகளில் 4 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் விளாசி 83 ரன்களைக் குவித்தார். அதுமட்டுமின்றி சூர்யகுமார் யாதவ்-திலக்வர்மா ஜோடி 87 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனதும், திலக் வர்மாவுடன் இணைந்தார் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா. இவர்கள் இருவரும் சேர்ந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 49 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 20 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com