டாக்டர் கே. பாலசுப்பிரமணியன் முடநீக்கியல் மருத்துவ நிபுணர், அப்போல்லா மருத்துவமனை, திருச்சி:
நாற்பது வயதுக்கு மேல், பெண்களுக்கு குதிகால் வலி வந்துவிடுகிறது. இந்தக் குதிகால் வலி என்பது எப்போதும் நிரந்தரம் அல்ல. தாற்காலிகமானதுதான். குதிகால் எலும்புகளையும் கால்விரல்களின் எலும்புகளையும் இணைக்கும் திசுப்படலத்தில் ஏற்படும் பிரச்னை களினால், குதிகால் வலி ஏற்படுகிறது.
சிலருக்குப் பாதங்கள் தட்டையாக இருப்பதால் குதிகால் வலி ஏற்படும். வெறுங்கால்களுடன் வீட்டிலோ வெளியிலோ மார்பிள் டைல்ஸ் தரைகளிலோ மிக அதிக நேரம் நிற்பது மற்றும் நடந்துகொண்டே இருப்பது, அதிக உடல் பருமன், திடீரென குறுகிய காலத்தில் உடல் எடை அதிகரித்தல், பழைய செருப்புகள், ஹை ஹீல்ஸ் மற்றும் பொருந்தாத காலணிகள், கடுமையான செருப்புகள் போன்றவற்றால் குதிகால் வலி ஏற்படும். காலையில் படுக்கையை விட்டு எழுந்து நிற்கும்போது, இந்தக் குதிகால் வலி மெல்ல எட்டிப் பார்க்கும். அலுவலகத்தில் நீண்டநேரமாக உட்கார்ந்து வேலை பார்த்துவிட்டு எழுந்து நிற்கும்போதும் நடக்கும்போதும் குதிகால் வலி குத்துக் காலிட்டு வரவேற்கும். தனியார் நிறுவனங்களின் விற்பனை அங்காடிகளில் நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை பார்க்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் குதிகால் வலி அதிகம் வரும்.
இதற்கு என்னதான் தீர்வு? உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடையினைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கால் பாதங்களுக்கு ஓய்வு தரலாம். இரவு படுக்கையின்போது கால்பாதங்களுக்கு பெயின் ரிலீஃபிங் ஜெல் தடவிக்கொண்டால், காலையில் எழுந்திருக்கும் போது குதிகால் வலி விடைபெற்றுச் சென்றிருக்கும். மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகளை இரவு நேரங்களில் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் நவீனமாக இதற்கெனத் தனியாகத் தற்போது காலணிகள் கூட வந்துவிட்டன. குதிகால் பகுதிகளில் அதிகமாகக் குஷன் கொண்ட காலணிகள் அணிந்துகொள்ளலாம். ஷூ அணிந்து கொள்ளும் பெண்களுக்கு நவீனமாக சிலிக்கோன் ஹீல் (SILICONE HEEL) எனப்படும் ஒரு மிருதுவான சிறு வடிவத்தினை ஷூவின் உள்ளே குதிகாலுக்குக் கீழே வைத்துக்கொள்ளலாம். குதிகால் வலியினால் தொடர்ந்து அவதிப்படுபவர் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம். அவர் அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில், கால் பாதங்களின் கீழே அந்தத் திசுப்படலம் சேருமிடத்தில் ஊசி மருந்து செலுத்தி நிரந்தரமாகவும் குதிகால் வலியிருந்து நிம்மதியாக மீண்டுவிடலாம்.
(மங்கையர் மலர் ஏப்ரல் 1-15, 2017)