என்ன ஆயிற்று பாகிஸ்தான் அணிக்கு? விளாசும் முன்னாள் வீரர்கள்!

Pakistan Cricket Team
Pakistan Cricket Team
Published on

- மதுவந்தி

நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் T20 போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்தது பாகிஸ்தான் அணி. இது நாம் அனைவரும் அறிந்தது தான் என்றாலும், இந்த தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி பலத்த எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. அதுவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி பத்தொன்பது ஓவர் முடிவில் 119 எடுத்து, இதனைத் தொடர்ந்து விளையாடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தின் முன் நிற்க முடியாமல் 113 ரன்களுக்கு சுருண்டது.

எனவே, பாகிஸ்தான் அணி பலத்த விமர்சனத்தைச் சந்திக்க நேர்ந்தது. போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கோச் கேரி கிறிஸ்டன் பேசுகையில், "போட்டியின் முடிவு பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது. 120 என்பது எளிய இலக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் பாகிஸ்தான் அணி நன்றாகத் தான் விளையாடியது, ஆனால் பதினாறாவது  ஓவர் முதல் ஆட்டம் கையை மீறிப் போய்விட்டது. அணி அந்த நேரத்தில் எடுத்த முடிவுகள் தவறாக முடிந்தது.

 இதே தான் அமெரிக்க அணிக்கு எதிராகவும் நடந்தது. விக்கெட்டுகளை பறிகொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. விளையாடும் பொழுது வரும் வாய்ப்புகளை வீரர்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார், அதில் "இந்த தோல்வி மிக மிக வருத்தம் அளிக்கிறது. வெற்றி தோல்வி சகஜம் தான் ஆனால் அவர்கள் தோற்ற விதத்தைப் பற்றிய விளக்கத்தை அவர்கள் தான் தர வேண்டும். எத்தனை முறை நான் கூறுவது அணியில் மாற்றம் வேண்டும் என. புதிய வீரர்களை அணிக்கு அழைத்து வர வேண்டும், தோற்றாலும் புதிய வீரர்களை வைத்துத் தோற்கலாம். பிறகு அவர்களை மெருகேற்றலாம். ஆனால் இப்பொழுது இருக்கும் அணிக்கு இதற்கு மேல் T20 போட்டிகளில் விளையாடத் தகுதி இருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஐநா அறிவிப்பு - 11.06.2024 ஆன இன்று முதலாவது சர்வதேச ‘விளையாட்டுக்களுக்கான’ தினம்!
Pakistan Cricket Team

இதே போல் மற்றுமொரு  முன்னாள் வீரரான சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் 'ஏமாற்றமாகவும், புண்படுத்துவதுமாக இருக்கிறது' எனப் போடத் தயாராக இருக்க வேண்டும் போல் இருக்கிறது அணியின் செயல்திறன் ஒவ்வொரு போட்டியிலும். அணிக்காக விளையாட வேண்டுமே தவிரத் தனி ஒரு வீரரின் சுய மைல்கல்லைப் பற்றி யோசிக்கக் கூடாது. நீங்கள் மட்டுமல்ல மொத்த தேசமுமே ஏமாற்றமடைந்து இருக்கிறது. போட்டியை வெற்றி பெரும் நோக்கத்துடன் விளையாட வேண்டும். இந்த அணிக்கு அடுத்த சுற்றுக்குப் போகத் தகுதி இருக்கிறதா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என மனமுடைந்து பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ரமீஸ் ராஜா  "போட்டியை ஜெயிப்பதற்கான எந்த ஒரு அறிகுறியோடும் அணி விளையாடவில்லை. இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் அணி திகைத்துப் போய்விடுகிறது, அதைப் பார்ப்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. தேவை இல்லாமல் விக்கெட்டுகளை கொடுத்துவிட்டார்கள்" எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு முந்தைய அமெரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாகத் தோற்றுப் போனது. இதனால் அடுத்த சுற்றுக்குப் பாகிஸ்தான் அணி போகுமா என்பதே சந்தேகமாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com